சின்னவெங்காயம் விலை வீழ்ச்சி உழவர் சந்தைகளில் கிலோ ரூ.18-க்கு விற்பனை
சேலத்தில் வரத்து அதிகரிப்பு காரணமாக சின்னவெங்காயம் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.
சேலத்தில் வரத்து அதிகரிப்பு காரணமாக சின்னவெங்காயம் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. உழவர் சந்தைகளில் சின்னவெங்காயம் கிலோ ரூ.18-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சின்னவெங்காயம் சேலம் மாவட்டம் தலைவாசல், ஆத்தூர், அயோத்தியாப்பட்டணம், காடையாம்பட்டி, வீரபாண்டி ஆகிய பகுதிகளில் அதிகளவு சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கிருந்து தினமும் ஏராளமான விவசாயிகள் சின்ன வெங்காயத்தை உழவர் சந்தைகளுக்கு கொண்டு வந்து விற்பனை செய்வார்கள்.
அதே போன்று நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்தும் சின்ன வெங்காயம் சேலம் உழவர் சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் நோய் தாக்கம் காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டதால் சின்னவெங்காயம் வரத்து குறைந்து கிலோ ரூ.150 வரை விற்பனை செய்யப்பட்டது. பின்னர் அதன் விலை குறைந்தாலும் டிசம்பர் மாதத்தில் சின்னவெங்காயம் கிலோ ரூ.100 வரை விற்கப்பட்டது.
தற்போது விளைச்சல் அதிகரிப்பு காரணமாக உழவர் சந்தைகள் மற்றும் வெளி மார்க்கெட்டுகளுக்கு சின்னவெங்காயம் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சின்னவெங்காயம் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. உழவர் சந்தைகளில் நேற்று சின்னவெங்காயம் கிலோ ரூ.18 முதல் ரூ.20 வரை விற்பனை செய்யப்பட்டது. பெரிய பெங்காயம் கிலோ ரூ.24 முதல் ரூ.32 வரை விற்கப்பட்டது. வெளி மார்க்கெட்டுகளில் சின்னவெங்காயம் கிலோ ரூ.25 முதல் ரூ.30 வரையிலும், பெரிய வெங்காயம் கிலோ ரூ.30 முதல் ரூ.35 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது.