துர்நாற்றம் வீசும் கழிப்பிடம்; பயணிகள் அவதி

துர்நாற்றம் வீசும் கழிப்பிடம்; பயணிகள் அவதி

 உத்திரமேரூர் பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பிடம் மோசமான நிலையில் துர்நாற்றம் வீசுவதால், பயணிகள் இயற்கை உபாதையை கழிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.  

உத்திரமேரூர் பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பிடம் மோசமான நிலையில் துர்நாற்றம் வீசுவதால், பயணிகள் இயற்கை உபாதையை கழிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர், பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை, காஞ்சிபுரம், மதுராந்தகம், செங்கல்பட்டு, வந்தவாசி, போளூர் மற்றும் திருப்பதி போன்ற, 100க்கும் மேற்பட்ட, அரசு மற்றும் தனியார் பேருந்துகள் தினமும் இயக்கப்படுகின்றன. உத்திரமேரூர் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பயணியர் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும் பயணியர், பேருந்து நிலையத்தில் உள்ள பேரூராட்சி கட்டண கழிப்பறையை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த கட்டண கழிப்பிடத்தில் சிறுநீர் கழிக்க 10 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. ஆனால், அந்த கழிப்பறை பெயரளவில் கூட பராமரிப்பு இல்லாமல், மிக மோசமான நிலையில் துர்நாற்றம் வீசுகிறது. அதேபோல், கழிப்பறை மது அருந்து கூடாரமாக மாறி உள்ளது. இதுகுறித்து பயணியர் கூறியதாவது: கழிப்பறையிலிருந்து வெளியேறும் சிறுநீர் கால்வாயில் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. அதேபோல, அப்பகுதியில் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து உள்ளது.

இதனால், பேருந்து நிலையத்திற்கு வரும் பயணியர் மற்றும் குத்தகை எடுத்துள்ள கடைக்காரர்கள் கழிப்பறையின் துர்நாற்றம் தாங்க முடியாமல், உடல்நல பாதிப்பிற்கு ஆளாகின்றனர். மோசமான கழிப்பறை நோய்த்தொற்று ஏற்படுத்தும் மையமாகவும், 'குடி'மகன்களின் புகலிடமாகவும் மாறியுள்ளது. இதனால், பேருந்து பயணியர் மற்றும் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே, கழிப்பறையை முறையாக பராமரிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags

Next Story