புகை பிடிக்கும் பழக்கத்தில் இருந்து மாற வேண்டுமா
கோப்பு பட
புற்றுநோய்க்கான ஸ்கிரீனிங் பரிசோதனையை ஒவ்வொரு ஆண்டும் புகை பிடிக்கும் நபர்கள் செய்து கொள்வது முக்கியம். வழக்கமாக, இதற்காக குறைவான மருந்து அளவு கொண்ட ஒரு சிடி பரிசோதனை பரிந்துரைக்கப்படுகிறது புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்துவதற்கு மருத்துவ நிபுணர்களது ஆலோசனையை தேடுவது கண்டிப்பாக அவசியம். கவுன்சிலிங், மருந்துகள் மற்றும் ஆதரவு குழுக்கள் ஆகிய வழிமுறைகளை உள்ளடக்கிய முறைசார்ந்த செயல்திட்டங்களில் பங்கேற்பவர்களில் ஏறக்குறைய 80% புகைபிடிக்கும் வழக்கத்தை விட்டுவிடுவதில் வெற்றி காண்கின்றனர்.
இதற்கு மாறாக, நிக்கோடினுக்கு (புகைபிடித்தல்) அடிமைப்படுதலிலிருந்து தாங்களாகவே விடுபட முயற்சிக்கின்ற நபர்களுள் 20% மட்டுமே அம்முயற்சியில் வெற்றி பெறுகின்றனர் என்று மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் நிபுணர்கள் வலியுறுத்தினர்.
ஒவ்வொரு ஆண்டும் மே 31-ம் தேதி உலக புகையிலை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்படுவதையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட செய்தியாளர் சந்திப்பு நிகழ்வில் மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் நுரையீரலியல் சிகிச்சை துறையின் தலைவரும், முதுநிலை நிபுணருமான டாக்டர். G. வேல்குமார் பேசுகையில், கஞ்சா (மரிஜுவானா) அல்லது கோகைன் போன்ற போதைப் பொருட்களுக்கு அடிமைப்படுதலோடு ஒப்பிடுகையில், நிக்கோடின் (புகைபிடித்தல்) அடிமைத்தனம் என்பது, விடுபடுவதற்கு மிகக் கடுமையானவைகளுள் ஒன்றாக கருதப்படுகிறது என்று கூறினார்.
புகைபிடிப்பதை வெற்றிகரமாக கைவிடுவதற்கு புகைபிடிப்பவர்களுக்கு உதவ உளவியல், மருத்துவம் மற்றும் சமூக நடவடிக்கைகளின் ஒருங்கிணைந்த சரியான சிகிச்சை அவசியமாக இருக்கிறது என்று குறிப்பிட்டார். மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் மருத்துவ புற்றுநோயியல் துறையின் தலைவரும் மற்றும் முதுநிலை நிபுணருடனான டாக்டர். கிருஷ்ணகுமார் ரத்னம் கூறியதாவது: “கடந்த 20 ஆண்டுகளில் புகையிலைப் பயன்பாட்டில் உலகளவில் சற்றே சரிவு காணப்பட்டிருக்கிறது. 2000 ஆம் ஆண்டின் போது, 3 நபர்களில் ஒருவர் என்ற அளவோடு ஒப்பிடுகையில், 2022-ல் வயதுவந்த 5 நபர்களில் ஒருவர் புகைபிடிக்கிறார் என்று உலக சுகாதார நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கையின் மதிப்பீடுகள் குறிப்பிடுகின்றன.
இந்தியாவில் கூட புகைபிடிக்கும் நபர்களின் எண்ணிக்கை சற்றே குறைந்து வருகிறது. புகையிலை தயாரிப்புகள் கிடைக்கும் நிலை அல்லது அதனைப் பயன்படுத்துவதை தடை செய்யும் சட்டங்களும், விதிமுறைகளுமே இதற்கு காரணம் என்று கூறலாம். புகைபிடிக்கும் நபர்களிடமிருந்து அவர்களுக்கு அருகில் இருப்பவர்கள் புகையை சுவாசிப்பதனால் ஏற்படும் அங்கீகரிக்கப்பட்ட உடல்நல கேடுகளின் காரணமாக, பொது இடங்களில் புகைபிடிப்பது மீது ஒட்டுமொத்த தடையை இந்தியா விதித்து அமல்படுத்தியிருக்கிறது. சிகரெட்டுகள் அல்லது பிற புகையிலை தயாரிப்புகள் மீது விளம்பரம் செய்வதையும் சட்டவிரோதமானதாக இந்தியா அறிவித்திருக்கிறது.
மேலும், 21 வயதுக்கு கீழுள்ள நபருக்கு சிகரெட்டுகளை அல்லது வேறு பிற புகையிலைத் தயாரிப்புகளை எவரும் விற்பனை செய்யக்கூடாது என்ற விதிமுறையும் இருக்கிறது. அத்துடன், எந்தவொரு பள்ளி அல்லது கல்வி நிறுவனத்திலிருந்து 100 மீட்டர் தூரத்திற்குள் உள்ள பகுதியில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்ற விதியும் இருக்கிறது.
திரைப்படங்கள் அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் புகைப்பிடிக்கும் நபர்களை காட்டும்போது, புகைபிடிப்பதனால் வரும் தீங்குகளை குறிப்பிடுகின்ற செய்தி இடம்பெற வேண்டும் என்ற கட்டுப்பாடும் அமல்படுத்தப்படுகிறது. புகையிலையினால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நபர்களாக இருக்கும் இளவயது நபர்கள் மத்தியில் இந்த விதிமுறைகள் அனைத்தும் ஒருங்கிணைந்து, விரும்பத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன என்று கூறலாம்.” இந்த சந்திப்பு நிகழ்வின்போது மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் மருத்துவ நிர்வாகி டாக்டர். B. கண்ணன் உடனிருந்தார்.