குமரியில் மதுபாட்டில்கள் கடத்தல்:  விசிக  நிர்வாகி உட்பட 2 பேர் கைது

குமரியில் மதுபாட்டில்கள் கடத்தல்:   விசிக  நிர்வாகி உட்பட 2 பேர் கைது
பைல் படம்
குமரியில் மதுபாட்டில்கள் கடத்திய  விசிக  நிர்வாகி உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிக அளவில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள், திருட்டு மதுபானம் போன்றவை விற்பனை நடைபெற்று வருகிறது. இதை தடுக்க போலீஸ் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் அஞ்சுகிராமம் அருகே உள்ள புன்னார்குளம் வேகத்தடை அருகே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் எட்வர்ட் பிரைட் என்பவர் தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல பொறுப்பாளர் சுசீந்திரம், கற்காடு பகுதியை சேர்ந்த சுரேஷ் என்ற திருமாவேந்தன் (44) அவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த ராஜ் (46)ஆகியோர் வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தினர். இதில் திருமாவேந்தன் பைக்கை ஓட்டி வந்தார்.

ராஜ் என்பவர் பின்னால் அமர்ந்திருந்தார். பைக்கில் பை வைத்திருந்தனர். சந்தேகத்தின் பேரில் அந்த பையில் என்ன இருக்கிறது என போலீசார் கேட்டனர். அப்போது திருமாவேந்தன் மற்றும் ராஜ் ஆகியோர் போலீசாரை சோதனை செய்ய விடாமல் தடுத்து அவதூறாக பேசி தகராறு செய்ததாக கூறப்படுகிறது. மேலும் சோதனையிட்டதில், அப்போது அதில் 245 குவாட்டர் பாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதிக விலைக்கு திருட்டுத்தனமாக விற்பனை செய்ய மொத்தமாக இந்த மது பாட்டில்களை கொண்டு சென்றதும் தெரிய வந்தது. இதை அடுத்து இருவரையும் போலீஸ் நிலையத்துக்கு வருமாறு அழைத்தனர். அப்போது மீண்டும் தகராறு செய்து போலீசாரை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதையடுத்து உடனடியாக கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு திருமாவேந்தன் மற்றும் ராக் ஆகியோர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

பின்னர் எஸ். ஐ எட்வர்ட் பிரைட்டின் புகாரின் பேரில் இரண்டு பேர் மீதும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 294 (பி) 353, 506 (ii) மற்றும் திருட்டு மது விற்பனை 4 (1) (a) r /w 14 (A) என பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

Tags

Next Story