ரேஷன் அரிசி கடத்தல் - 720 கிலோ பறிமுதல், பெண் உட்பட 2பேர் கைது
கைது
தூத்துக்குடி மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுராதா தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், ஏட்டுக்கள் கந்தசுப்பிரமணியன், பூலையா நாகராஜன் ஆகியோர் உழக்குடி பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அங்கு வந்த லோடு ஆட்டோவை வழிமறித்து போலீசார் சோதனை செய்தனர்.
அதில் 18 மூட்டைகளில் தலா 40 கிலோ வீதம் 720 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. உடனடியாக போலீசார் அந்த ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து லோடு ஆட்டோவை ஓட்டி வந்த பாளையங்கோட்டை பெருமாள்புரத்தை சேர்ந்த மார்க் ஞானராஜ் என்பவரை போலீசார் மடக்கிப்பிடித்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், கலியாவூரை சேர்ந்த ஆறுமுகத்தாய் (65) என்பவருடன் சேர்ந்து, அந்த பகுதியில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, மாட்டு பண்ணைக்கு அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக கடத்தி சென்றதாக அவர் தெரிவித்து உள்ளார். இதனை தொடர்ந்து மார்க் ஞானராஜ், ஆறுமுகத்தாய் ஆகிய 2 பேர் மீது குடிமைப் பொருள் குற்ற புலனாய்வு துறை போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.