வத்திராயிருப்பு அருகே புகையிலை பொருட்கள் கடத்தல் : 4 பேர் கைது
காவல் நிலையம்
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர். வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
வத்திராயிருப்பு அருகே மலையன்குளம் கிராமம் அருகே நத்தம்பட்டி போலீசார் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது கூமாபட்டியை ஒட்டிய பூரிப்பாறைக்குளம் கண்மாய் பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து இரவு முழுவதும் வத்திராயிருப்பு, மற்றும் நத்தம்பட்டி, கூமாபட்டி போலீசார் உஷார் படுத்தப்பட்டு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அத்துடன் கூமாபட்டி போலீசார் தீவிர ரோந்து பணிகளிலும் ஈடுபட்டனர்.அப்போது பூரிப்பாறை கண்மாய் அடிவாரத்தில் உள்ள ராமர் என்பவரது விவசாய நிலத்தில் உள்ள மோட்டார் ரூமில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 16 மூடைகளில் 192 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை கண்டுபிடித்தனர்.
அவற்றை பறிமுதல் செய்ததுடன் அவற்றை கடத்திய கான்சாபுரம் கிராமத்தை சேர்ந்த லத்தீப் வயது 34, ராமசாமியாபுரம் ராமர் வயது 45, மதுரை மாவட்டம் சின்னையாபுரத்தை சேர்ந்த தங்கத்துரை வயது 37, மதுரை மாவட்டம் கே.புதுப்பட்டியை சேர்ந்த சற்குணம் வயது 32, ஆகியோரை கைது செய்தனர்.
கைப்பற்றப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூபாய் 2 லட்சத்து 24 ஆயிரம் என போலீசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட நான்கு பேரிடமும் தொடர்ந்து விசாரணை செய்து அவர்கள் மேலும் பல்வேறு இடங்களில் பதுக்கி வைத்துள்ள குட்கா விபரங்களை சேகரித்து வருகின்றனர்.
குட்கா கடத்துவதற்கு பயன்படுத்திய சரக்கு வாகனம் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.