ஸ்கூட்டியில் பதுங்கிய பாம்பு - ஒரு மணி நேரத்திற்கு பின் மீட்பு

ஸ்கூட்டியில் பதுங்கிய பாம்பு -  ஒரு மணி நேரத்திற்கு பின் மீட்பு

பாம்பை மீட்கும் பணி

திருவண்ணாமலை ஈசானிய மைதானம் முன்பு நகர நல மையம் இயங்கி வருகிறது. அங்கு பணிபுரியும் பெண் மருத்துவர் ஒருவர் தனது ஸ்கூட்டியை அங்குள்ள மரத்தின் அடியில் நிறுத்திவிட்டு பணிக்கு சென்றார். அப்போது மரத்தில் இருந்த பாம்பு ஒன்று இறங்கி வந்து அவரது ஸ்கூட்டியில் புகுந்து விட்டது. இதனை அங்கிருந்தவர்கள் பார்த்து டாக்டருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் ஸ்கூட்டியில் இருந்த பாம்பை தேடினர். ஆனால் பாம்பு சிக்கவில்லை. இதை அடுத்து பாம்பு வெளியே வருவதற்கு டெட்டால் கலந்த தண்ணீரை தீயணைப்புத் துறையினர் ஸ்கூட்டியில் ஊற்றினர். அப்போதும் பாம்பு வரவில்லை. இதனால் பைக் மெக்கானிக் வரவழைக்கப்பட்டார். அவர் ஸ்கூட்டியின் உதிரி பாகங்களை ஒவ்வொன்றாக பிரித்து பாம்பு இருக்கிறதா என ஆராய்ச்சி செய்தார். அப்போது ஸ்கூட்டியின் முன்புற பகுதியில் பதுங்கி இருந்த பாம்பு எகிறி தரையில் குதித்து ஓடியது. உடனே தீயணைப்பு வீரர் தன் கையில் இருந்த பாம்பு பிடிக்கும் இடுக்கியால் பாம்பு ஓட விடாமல் தடுத்தார். பின்னர் இடுக்கியால் பாம்பை பிடித்து பைப்பில் அடைத்து எடுத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பிடிப்பட்டது நான்கடி நீளம் உள்ள கொம்பேறி மூக்கன் எனப்படும் மரமேறி பாம்பாகும். பொதுவாகவே மரத்தின் கீழோ அல்லது அடர்த்தியான புதர்கள், கற்களின் அருகிலோ வாகனங்களை நிறுத்தி இருந்தால் வண்டியை எடுக்கும் போது வண்டிக்கு உள்ளேயும் வெளியேயும் பார்த்துவிட்டு எடுப்பது நல்லது என தீயணைப்பு துறை அதிகாரிகள் அறிவுறுத்தி விட்டு சென்றனர்.

Tags

Next Story