காவல் நிலையம் முன்பு கடத்தல் வாகனத்தை மடக்கிய சமூக ஆர்வலர்

காவல் நிலையம் முன்பு கடத்தல் வாகனத்தை மடக்கிய சமூக ஆர்வலர்
பிடிபட்ட மண்ணெண்ணெய்
மண்ணெண்ணெய் கடத்த முயன்ற வாகனத்தை சமூக ஆர்வலர் ஒருவர் பின் தொடர்ந்து சென்று கொல்லங்கோடு காவல் நிலையம் முன்பாக மடக்கி பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குமரி மாவட்டம் நித்திரவிளை பகுதியை சார்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் நேற்று இரவு 8:30 மணியளவில் தனது வீட்டு முன்னால் நின்று கொண்டிருந்த போது, மீன் கொண்டு செல்லும் ஃப்றீசர் வாகனம் ஒன்று கேரளா நோக்கி சென்றுள்ளது. அந்த வாகனத்தில் இருந்து மண்ணெண்ணெய் நாற்றம் வந்துள்ளது. இது சம்பந்தமாக போலீசாருக்கு சமூக ஆர்வலர் தகவல் கொடுத்துள்ளார். அதேவேளையில் மைலோடு கொலை வழக்கு பாதுகாப்பு சம்மந்தமாக அதிகாரிகள் மற்றும் போலீசார் சென்றிருந்ததால், காவல் நிலையத்தில் இருந்து சரியான பதில் கிடைக்கவில்லை.

இதனால் சமூக ஆர்வலர், காக்கவிளை சோதனை சாவடி போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். சோதனை சாவடி போலீசார் கடத்தல் வாகனத்தை எதிர்பார்த்து நின்றுள்ளனர். போலீசார் வாகனத்தை பிடிக்க தயார் நிலையில் நிற்பதை அறிந்த கடத்தல் வாகன டிரைவர், மாற்று வழியில் கடத்தல் வாகனத்தை செலுத்தியுள்ளார். இதையடுத்து பின் தொடர்ந்து சென்ற சமூக ஆர்வலர் கடத்தல் வாகனத்தை முந்தி சென்று கொல்லங்கோடு காவல் நிலையம் முன்னால் தனது பைக்கை சாலையின் குறுக்கே நிறுத்தி, கடத்தல் வாகனத்தை மடக்கி பிடித்து கொல்லங்கோடு காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.

போலீசார் விசாரணை நடத்தியதில் மண்டைக்காடு பகுதியில் இருந்து பைபர் படகிற்கு மானிய விலையில் வழங்கப்படும் மண்ணெண்ணெயை ஏற்றி கேரளாவுக்கு கொண்டு செல்வது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வாகனத்தையும், மண்ணெண்ணெயையும் கிள்ளியூர் வட்ட வழங்கல் அலுவலரிடம் ஒப்படைத்தனர். சமூக ஆர்வலர் ஒருவர் சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் கடத்தல் வாகனத்தை பின்தொடர்ந்து வந்து, காவல் நிலையம் முன்பு வைத்து மடக்கி பிடித்து கொல்லங்கோடு காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story