நிழற்குடை அமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

நிழற்குடை அமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

கூடுவாஞ்சேரி சாலைவில் நிழற்குடை கட்டும் பணியிணை துவக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கூடுவாஞ்சேரி சாலைவில் நிழற்குடை கட்டும் பணியிணை துவக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செங்கல்பட்டு - பெருங்களத்துார் இடையிலான தேசிய நெடுஞ்சாலை, ஆறுவழி பாதையாக இருந்தது. அப்போது, பரனுார், பொத்தேரி, சிங்கபெருமாள் கோவில், மறைமலை நகர், காட்டாங்கொளத்துார், கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், வண்டலுார், பெருங்களத்துார் உள்ளிட்ட பகுதிகளில், சாலையின் இருபுறமும் பயணியர் நிழற்குடைகள் அமைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து அதிகரித்ததால், பெருங்களத்துார் -- பரனுார் வரை சாலையை விரிவாக்கம் செய்ய, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்தது. எட்டு வழிச்சாலையாக மாற்ற முடிவு செய்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம், பெருங்களத்துார் -- கூடுவாஞ்சேரி வரை, 2019-ம் ஆண்டு பணிகளை துவக்கி, 2020-ம் ஆண்டு நிறைவு பெற்றது. இதேபோல், கூடுவாஞ்சேரி -- மகேந்திரா வேர்ல்டு சிட்டி வரையிலான விரிவாக்கப் பணிகள், 2020-ல் துவக்கி, 2023-ம் ஆண்டு நிறைவடைந்தன. இந்த பணியின் போது, விரிவாக்கத்திற்கு இடையூறாக சாலையின் இருபுறமும் இருந்த பயணியர் நிழற்குடைகள் அனைத்தும் அகற்றப்பட்டன.

ஆனால், பணிகள் முடிந்தபின், மீண்டும் பேருந்து நிழற்குடைகள் அமைக்கப்படவில்லை. இதனால், மழை, வெயில் காலங்களில், பேருந்திற்காக காத்திருக்கும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். மீண்டும் பயணியர் நிழற்குடை அமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள், அப்போதைய கலெக்டர் ராகுல்நாத்திடம் வலியுறுத்தினர். தேசிய நெடுஞ்சாலையில் மீண்டும் பயணியர் நிழற்குடை அமைக்க வேண்டும் என, உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். ஆனால், இந்த உத்தரவை, உள்ளாட்சி நிர்வாகங்கள் அலட்சியப்படுத்தின. இதைத்தொடர்ந்து, பெருங்களத்துார் -- பரனுார் வரை நிழற்குடை அமைக்க வேண்டும் என, கலெக்டர், தமிழக அரசு மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு, சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து மனு அளித்து வந்தனர்.

இதற்கிடையில், சில தினங்களுக்கு முன், செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில், சட்டம் - ஒழுங்கு ஆய்வுக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், தேசிய நெடுஞ்சாலை பகுதியில், அகற்றப்பட்ட நிழற்குடைகளை மீண்டும் கட்ட வேண்டும் என, தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளுக்கு, கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார். அதன்பின், தேசிய நெடுஞ்சாலையில் பயணியர் நிழற்குடை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே, நிழற்குடை கட்டும் பணியை உடனே துவக்கி, விரைந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags

Next Story