பள்ளி பிரச்சினைக்கு தீர்வு: குழந்தைகள் செல்ல வாகனம் ஏற்பாடு
போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தெற்கு குமாரபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு தலைமை ஆசிரியராக மங்கையர்கரசி என்பவரும், உதவி ஆசிரியராக ரத்தினமாலா என்பவரும் பணியாற்றி வருகின்றனர்.
இந்த பள்ளியில் 23 மாணவ - மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்குள்ள கட்டிடம் பழமையானதை தொடர்ந்து புதிய கட்டிடம் கட்டப்பட்டு கடந்த 2005-ம் ஆண்டு திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதில் 2 வகுப்பறைகள், ஒரு தலைமை ஆசிரியர் அறை ஆகியவை உள்ளன. இந்த கட்டிடம் அருகே சமையலறையும் உள்ளது.
மேலும், இந்த பள்ளி வளாகத்தில் பழைய வகுப்பறை, சமையலறை கட்டிடங்கள் இடிக்கப்படாமல் உள்ளன. இந்நிலையில், கடந்த மாதம் 8-ம் தேதி மாலை முதல் விடிய விடிய மழை பெய்தது. இதில், அன்றிரவு பள்ளியின் இடப்பக்க சுற்றுச்சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதையெடுத்து பள்ளியில் போதிய பாதுகாப்பு இல்லை, மேலும் இந்த பள்ளியில் வடக்கு குமராபுரம், நடு குமாரபுரம் கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் தான் அதிகளவில் பயின்று வருகின்றனர்.
இவர்கள் பள்ளிக்கு வரும் காட்டுபாதை பாதுகாப்பாக இல்லை எனவே பள்ளியை தங்களது கிராமத்திற்கு மாற்ற வேண்டும் அதுவரை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்று கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இவர்களுடன் அதிகாரிகள் பலமுறை பேச்சு வார்த்தை நடத்தியும் எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை.
இந்நிலையில் வடக்கு குமராபுரத்தில் பள்ளி கட்டி தர வேண்டும், இல்லையென்றால் குழந்தைகளின் பள்ளி மாற்றுச்சான்றிதழை தர வலியுறுத்தி பள்ளி குழந்தைகளுடன் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.