சோமநாத சுவாமி கோவில் ஆனி உத்திர திருவிழா !
திருவிழா
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி சோமநாத சுவாமி கோவில் ஆனி உத்திர திருவிழாவில் சுவாமி, அம்பாள் பூஞ்சப்பரத்தில் வீதிஉலா நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரியில் உள்ள திருவாடுதுறை ஆதீனத்துக்கு பாத்தியப்பட்ட சோமசுந்தரி அம்பாள் சமேத சோமநாத சுவாமி கோவில் ஆனி உத்திர திருவிழா கடந்த 2-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி, அம்பாள் பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்தனர். தொடர்ந்து காலை, மாலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
மேலும் இரவில் தினமும் கோவில் வளாகத்தில் பக்தி சொற்பொழிவு, பட்டிமன்றம், சொல்லரங்கம், இன்னிசை கச்சேரி, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வான 10-ம் திருநாளான நேற்று காலை, மாலையில் சுவாமி, அம்பாள் பூஞ்சபரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
இரவு 7 மணி அளவில் சுவாமி, அம்பாள் சப்பரத்தில் கோவிலில் இருந்து புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் குடும்பத்தினருடன் திரண்டிருந்து சாமி தரிசனம் செய்தனர்.
மேலும், தெருக்களில் பக்தர்கள் தங்களது வீட்டுக்கு முன்பு சுவாமி,அம்பாளுக்கு சிறப்பு அர்ச்சனை செய்து வழிபட்டனர். திருவீதி உலா முடிந்து இரவு 11 மணிக்கு சுவாமி, அம்பாள் கோவிலை சென்றடைனர். அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.