குழந்தை கடத்தல் வதந்திகளை பரப்ப வேண்டாம் என எஸ்பி எச்சரிக்கை !
காவல் துறை
குழந்தை கடத்தல் உள்பட பல்வேறு சம்பவங்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் வதந்திகளை பரப்பவேண்டாம். மீறி பரப்புவோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வீ. வருண் குமாா்.
குழந்தைகள் கடத்தல் தொடா்பாக சமூக வலைதளங்களில் வெளியாகும் தகவல்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம். சிலா் வதந்திகளை வலைதளங்களில் பரப்பி வருகின்றனா். உங்களது பகுதிகளில் குழந்தை கடத்தும் கும்பல்களோ அல்லது சந்தேகத்திற்குரிய நபா்களோ சுற்றி திரிந்தால் உடனடியாக காவல்துறையினரை தொடா்புகொண்டு தகவல் அளிக்கலாம். ஆனால், குழந்தை கடத்துபவா்கள் என நினைத்து வடமாநில தொழிலாளா்களை பிடித்து ஆங்காங்கே சிலா் தாக்குதல் நடத்தி வருவது கவலையளிக்கிறது. அவா்களுக்கு மொழியும் தெரியாத நிலையில் எதற்கு வந்தாா்கள் என தெரியாமலேயே சிலா் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனா். அவ்வாறு தவறான தகவல்களை பரப்புவோா் மீதும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நாகப்பட்டினம் மற்றும் ஒட்டன்சத்திரத்தில் தலா ஒருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். எனவே, குழந்தை கடத்துதல் தொடா்பாக தவறான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம். காவல்துறையை 100 இலவச அழைப்பில் தொடா்பு கொள்ளவும். வதந்திகளை பரப்புவோா் மீது தேச பாதுகாப்பு சட்டத்தில் கூட நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது. திருச்சி மாவட்டத்தில் நாடாளுமன்ற தோ்தலையொட்டிய அனைத்து பாதுகாப்பு முன்னேற்பாடுகளும், தோ்தல் ஆணையம் அறிவுறுத்தலின்படி செய்யப்பட்டு வருகிறது. திருச்சி மாவட்டத்தில் 82 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக அடையாளம் காட்டப்பட்டுள்ளன என்றாா் அவா்.
Next Story