சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கைது

சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கைது

கைதானவர்


தருமபுரி மாவட்டம் ஏரியூரில் இளம் பெண்ணை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய சிறப்புகாவல் உதவி ஆய்வாளர் போக்சோ வழக்கில் கைது.

தருமபுரி மாவட்டம் ஏரியூர் அடுத்த நெருப்பூர் மணியகாரன் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சகாதேவன் (50) இவர் ஏரியூர் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். ஏரியூர் பகுதியை சேர்ந்த 18 வயது இளம் பெண்ணுடன் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. அப்போது இளம் பெண்ணிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அவருடன் பழகியதாக கூறப்படுகிறது.

அந்தப் பெண்ணுக்கு தற்போது ஒன்றரை வயதில் ஒரு குழந்தை உள்ளது. 18 வயது பூர்த்தி அடைவதற்கு முன்பே குழந்தை பெற்றதால் எவ்வித புகாரும் சகாதேவன் மீது காவல் நிலையத்தில் கொடுக்காமல் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் 18 வயது பூர்த்தி அடைந்ததையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் அவர்களிடம் தன் மகளை திருமணம் செய்வதாககூறி கர்பமாக்கி ஏமாற்றியதாகவும் அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்என புகார் கொடுத்துள்ளனர்.

இதனை அடுத்து காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பெயரில் பென்னாகரம் மகளிர் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சகாதேவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். தன் மீது வழக்கு பதியபட்டதை அறிந்த சகாதேவன் தலைமறைவாக இருந்து வந்தார். தலைமறைவாக இருந்த அவர் இன்று பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

இதனையடுத்து காவல் துறையினர் அவரை போக்சோ வழக்கின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சகாதேவன் தருமபுரி நகர காவல் நிலையத்தில் பணியாற்றிய போது காவல் நிலையத்தில் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனங்களை திருடி விற்றதில் கைது செய்யப்பட்டு மூன்று மாதம் சிறையில் இருந்து வெளியில் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story