கிராம ஊராட்சிகளில் சிறப்பு விழிப்புணர்வு முகாம்

கிராம ஊராட்சிகளில் சிறப்பு விழிப்புணர்வு முகாம்

மாவட்ட ஆட்சியர் கற்பகம் 

பெரம்பலூர் மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம் செயல்படுத்தப்படும் கிராம ஊராட்சிகளில் 07.02.2024 மற்றும் 28.02.2024 ஆகிய தேதிகளில் சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் கற்பகம் தெரிவித்தார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் 2023-24-ம் ஆண்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம் 25 கிராம பஞ்சாயத்துக்களில் செயல்படுத்தப்படுகிறது.

ஆலத்தூர் வட்டாரத்தில் சிறுகன்பூர், டி.களத்தூர், எலந்தலப்பட்டி, தெரணி, கொளத்தூர், திம்மூர், நொச்சிக்குளம் மற்றும் கண்ணப்பாடியிலும், பெரம்பலூர் வட்டாரத்தில் கல்பாடி, சிறுவாச்சூர், சத்திரமனை மற்றும் களரம்பட்டியிலும், வேப்பூர் வட்டாரத்தில் பெரிய வெண்மணி, வடக்கலூர், பெரியம்மாபாளையம், அந்தூர், ஆண்டிகுரும்பலூர், ஒதியம் மற்றும் குன்னத்திலும்,

வேப்பந்தட்டை வட்டாரத்தில் பெரியம்மாபாளையம், தொண்டமாந்துரை, பெரியவடகரை, தழுதாழை, தொண்டப்பாடி மற்றும் எறையூரிலும் செயல்படுத்தப்படுகிறது. இந்த கிராம ஊராட்சிகளில் 07.02.2024 மற்றும் 28.02.2024 ஆகிய தேதிகளில் சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடத்தப்படவுள்ளது.

இம்முகாம்களில் வேளாண்மை மற்றும் சுகாதாரத் துறை சார்ந்த திட்டங்கள் மற்றும் தொழில் நுட்பங்கள் குறித்தும் இதர துறைகளான வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து, கூட்டுறவுத்துறை, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, கால்நடைத்துறை, மீன்வளத்துறை மற்றும் பட்டு வளர்ப்புத்துறை ஆகிய துறைகள் சார்ந்த திட்டங்கள் குறித்து இக்கூட்டத்தில் எடுத்துரைக்கப்படும். மேலும், மேற்கூறிய துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களான பட்டா மாற்றம், வண்டல் மண் எடுத்தல், பயிர் கடன் பெறுவதற்கான விண்ணப்பங்கள் பெறப்படும். கால்நடைத்துறை மூலம் கால்நடை பராமரிப்பு மற்றும் நோய் தடுப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளது. எனவே இக்கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அனைவரும் கலந்துகொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம் தகவல் தெரிவித்துள்ளார்

Tags

Next Story