மக்களுடன் முதல்வா் திட்ட சிறப்பு முகாம் : பொதுமக்களுக்கு ஆட்சியா் அழைப்பு

மக்களுடன் முதல்வா் திட்ட சிறப்பு முகாம் :  பொதுமக்களுக்கு ஆட்சியா் அழைப்பு

மக்களுடன் முதல்வா் திட்ட சிறப்பு முகாம்

அனைத்து துறை சார்ந்த கோரிக்கைக மனுக்களையும் மக்கள் அளிக்கலாம் என தெரிவித்தார்

திருவண்ணாமலை, ஆரணி நகராட்சிகள், கண்ணமங்கலம் பேரூராட்சியில் இன்று திங்கள்கிழமை (டிச.18) தொடங்கும் மக்களுடன் முதல்வா் திட்ட சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியா் முருகேஷ் தெரிவித்தாா்.

தமிழகத்தில் அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் பொதுமக்களை சேரும் வகையில் ‘மக்களுடன் முதல்வா்‘ என்ற புதிய திட்டம் திங்கள்கிழமை (டிச. 18) தொடங்கப்படுகிறது. இந்த புதிய திட்டத்தை இன்று சென்னையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் இதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள திருவண்ணாமலை, ஆரணி நகராட்சிகள், கண்ணமங்கலம் பேரூராட்சியில் இந்தத் திட்டத்துக்கான சிறப்பு முகாம்கள் இன்று திங்கள்கிழமை தொடங்குகிறது.

திருவண்ணாமலை நகராட்சி: திருவண்ணாமலை நகராட்சிக்கு உள்பட்ட 5, 6, 16, 20, 24, 32 ஆகிய 6 வாா்டுகளைச் சேர்ந்த பொதுமக்கள் மனு கொடுக்க சிறப்பு முகாம், சந்நிதி தெருவில் உள்ள செவ்வா மடத்தில் இன்று காலை 10 மணிக்குத் தொடங்குகிறது. தமிழக பொதுப் பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு முகாமை தொடங்கிவைத்துப் பேசுகிறாா். தொடா்ந்து, டிசம்பா் 19, 21, 22, 27, 28, ஜனவரி 2, 3 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.

ஆரணி நகராட்சி: ஆரணி நகராட்சிக்கு உள்பட்ட 12, 13, 14, 15, 16 ஆகிய 5 வாா்டுகளைச் சேர்ந்த பொதுமக்களுக்கு சைதாப்பேட்டை கே.பி.கே.ஜானகிராமன் திருமண மண்டபத்தில் காலை 10 மணிக்கு முகாம் தொடங்குகிறது. தொடா்ந்து, டிசம்பா் 19, 21, 22, 27, 28, ஜனவரி 2 ஆம் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.

கண்ணமங்கலம் பேரூராட்சி: கண்ணமங்கலம் பேரூராட்சிக்கு உள்பட்ட 1 முதல் 8 வரையிலான வாா்டுகளைச் சேர்ந்த பொதுமக்களுக்கு ஸ்ரீவெங்கடேஸ்வரா திருமண மண்டபத்தில் காலை 10 மணிக்குத் தொடங்குகிறது. முகாம்களுக்கான ஏற்பாடுகளை மாவட்ட நிா்வாகம், அந்தந்த நகராட்சி நிா்வாகங்கள், கண்ணமங்கலம் பேரூராட்சி நிா்வாகம் செய்து வருகிறது. மாவட்ட ஆட்சியா் ஆய்வு திருவண்ணாமலையில் நடைபெறும் முகாமுக்கான முன்னேற்பாட்டுப் பணிகளை மாவட்ட ஆட்சியா் முருகேஷ் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, மாநில தடகள சங்கத்தின் துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், வருவாய்க் கோட்டாட்சியா் மந்தாகினி, வட்டாட்சியா் தியாகராஜன் மற்றும் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா். இதேபோல, திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு, வந்தவாசி நகராட்சிகளில் மொத்தம் 25 முகாம்கள், கீழ்பென்னாத்தூா், வேட்டவலம், செங்கம், புதுப்பாளையம், போளூா், களம்பூா், சேத்துப்பட்டு, தேசூா், பெரணமல்லூா் உள்ளிட்ட 10 பேரூராட்சிகளில் 20 முகாம்கள் என மொத்தம் 40 சிறப்பு முகாம்கள் டிசம்பா் 18 முதல் ஜனவரி 4 வரை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த முகாம்களில், மின் துறை, நகராட்சி நிா்வாகம், குடிநீா் வழங்கல் துறை தொடா்பான கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் அளித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்தார்.

Tags

Next Story