இடைநிற்றல் பள்ளி மாணவர்களை சேர்க்க சிறப்பு கள செயல்பாடு

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 11 வட்டாரங்களில் 6-ஆம் வகுப்பில் 110 மாணவர்கள், 7-ஆம் வகுப்பில் 150 மாணவர்கள், 8-ஆம் வகுப்பில் 223 மாணவர்கள், 9-ஆம் வகுப்பில் 565 மாணவர்கள் என மொத்தம் 1049 இடைநிற்றல் மாணவர்கள் உள்ளனர்.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை), துணை ஆட்சியர்கள், துணைக்காவல் கண்காணிப்பாளர் மற்றும் வட்டாட்சியர்கள் உட்பட 175 அலுவலர்களுக்கு ஒவ்வொரு அலுவலர்களுக்கும் தனித்தனியாக 6 இடைநின்ற மாணவர்களின் விபரங்கள் கொடுக்கப்பட்டு, ஒவ்வொரு அலுவலர்களும் நேரில் சந்தித்து, இடைநிற்றலுக்கான காரணம் அறிந்து, குறைகளை நீக்கி, மீண்டும் பள்ளியில் சேர நடவடிக்கை எடுக்கும் வகையில் இன்று 750 மாணவர்களை நேரில் சென்று சந்தித்து, இடைநிற்றலுக்கான காரணங்கள், குறைகளை கேட்டறிந்து அதை நிவர்த்தி செய்வதற்கான கள ஆய்வினை மேற்கொண்டார்கள்.
மாணவர்கள் சொல்கின்ற காரணங்களின் அடிப்படையில், அவர்களுக்கு உரிய வழிகாட்டுதல் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டு, பள்ளியில் சேர்வதை உறுதி செய்யும் வகையில் தொடர்ந்து அலுவலர்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவி, நிதியுதவி, மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் தேவையான ஆலோசனைகள் வழங்குதல், சிறப்பு வகுப்புகள் எடுத்தல், ஆர்வமின்மையை போக்கி மீண்டும் பள்ளியில் சேர்த்தல், புலம்பெயர்ந்தவர்களை கண்டறிந்து உரிய வழிகாட்டுதல், கல்வியின் அவசியம் குறித்து எடுத்துரைத்தல் உள்ளிட்ட பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு இடைநிற்றல் மாணவர்களை பள்ளியில் சேர்ப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
