மாற்றுதிறனாளிகள் சிறப்பு குறைத்தீர் கூட்டம் - ஆட்சியர் அறிவிப்பு

மாற்றுதிறனாளிகள் சிறப்பு குறைத்தீர் கூட்டம் - ஆட்சியர் அறிவிப்பு

மாவட்ட ஆட்சியர்

நாகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 20ம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித் தலைவர்.ஜானி டாம் வர்கீஸ்,வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது ,நாகப்பட்டினம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து அவரவர்க்கு தேவையான நலத்திட்ட உதவி குறித்த கோரிக்கை மனுக்கள் பெற்று தகுதியான கோரிக்கைகளுக்கு தீர்வுகாணும் வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட உள்ளது.

அது தொடர்பாக, வருகிற 20.02.2024 அன்று காலை 11.00 மணிக்கு நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த சிறப்பு குறைதீர்க்கும் கூட்டத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு அவர்களது கோரிக்கை மனுக்களை எழுத்துபூர்வமாக அளித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அன்றைய தினம், மாற்றுத்திறனாளிகளின் மனுக்கள் மீதான கோரிக்கைகளுக்கு ஏற்ப உரிய நடவடிக்கை எடுக்கும் பொருட்டு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மனுக்கள் வழங்கப்படும். வயது வரம்பு ஏதும் இல்லை. 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களும் விண்ணப்பம் அளிக்கலாம். மனுதாரர்களின் கோரிக்கைகள் அனைத்தும் அரசின் விதிகளுக்குட்பட்டு பரிசீலிக்கப்படுவதோடு, குறைகளுக்கு தீர்வு காணும் வகையில் உள்ள மனுக்களுக்கு உரிய உதவிகள் வழங்கிட தக்க நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்படும்.

வருகையின் போது இருப்பிட முகவரிக்கான ஆதாரம் குடும்ப அட்டை நகல், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகல் தற்போதைய புகைப்படம் ஆகியவற்றைத் தவறாது கொண்டுவர வேண்டும். இதற்கு முன்னர் விண்ணப்பம் அளித்திருந்து அதற்கான ஆதாரம், தொடர்புடைய கடிதங்கள் ஏதுமிருப்பின், அதனையும் தவறாது கொண்டு வரவேண்டும். இலவச வீட்டு மனைபட்டா இலவச வீடு கட்டமத்திய கூட்டுறவு வங்கிகளில் கடனுதவி பெறவிருப்பம் உள்ளவர்களும், இதுவரை தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெறாதவர்களும் மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தரவுகள் கணக்கெடுப்பில் இதுவரை தங்களது விபரங்களை பதிவு செய்யாதவர்களும் தங்களது கோரிக்கை தொடர்பாக எழுத்துபூர்வமாக மனு அளிக்கலாம்.

உதவி உபகரணங்கள் மாதாந்திரபராமரிப்பு உதவித்தொகை பெறவிரும்பும் மாற்றுத்திறனாளிகள் இணையதளம் மூலமாக விண்ணப்பித்து பயன்பெறலாம் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டு மாற்றுத்திறனாளிகள் அனைவரும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாளில் கலந்து கொண்டு கோரிக்கை மனு அளித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story