கல்லூரிகளில் சேராத மாணவர்களுக்கு சிறப்பு குறைதீர் கூட்டம்

கல்லூரிகளில் சேராத மாணவர்களுக்கு சிறப்பு குறைதீர் கூட்டம்

மாணவர்களுக்கு ஆலோசனை கூறிய ஆட்சியர் 

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வியில் சேராத 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மூன்றாம் கட்ட சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது.

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி சேராத பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான மூன்றாம் கட்ட சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்ததாவது: தமிழக அரசு, மாணவர்களின் உயர்கல்வி பயிலும் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் நோக்கில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், நான் முதல்வன் திட்டத்தின் மூலம் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்களை அதிகமாக உயர்கல்விக்கு சேர்க்கை பெறும் நோக்கில், பல்வேறு விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முயற்சியாக உயர்கல்வி சேராத பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள், உயர்கல்விக்கு விண்ணப்பிக்காத, குறிப்பிட்ட துறைக்கு விண்ணப்பித்து சேர்க்கை கிடைக்கப் பெறாத மாணவர்களுக்கு வழிக்காட்டும் விதமாக மூன்றாம் கட்டமாக சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாணவர்களிடமிருந்து, உயர்கல்வி பயில்வதற்கான பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான 30 மனுக்களை பெற்றுக்கொண்டு, உயர்கல்விக்கு சேராத மாணவர்களிடம் சந்தேகங்கள் மற்றும் குறைகளையும் கேட்டறிந்து மாணவர்கள் உயர்கல்வி சேர்வதற்கான வழிமுறைகள் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

மேலும், பெற்றோர்கள் இல்லாத மாணவர்கள், ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்கள், கல்லூரி சேர்ந்து படிப்பதற்கு அதிக அளவில் செலவு மேற்கொள்ள வேண்டியுள்ளது. எனவே அருகில் இருக்க கூடிய அரசு கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரியில் சேர்ந்து படிப்பதால் செலவினங்கள் குறைய வாய்ப்புகள் உண்டு. அதற்கும் மேலாக முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களை தேர்வு செய்து பல்வேறு அறக்கட்டளைகளே படிப்பு செலவினங்களை ஏற்றுக்கொள்கிறது. எனவே மாணவர்கள் அதற்கான வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும். அரசு பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு புதுமைப்பெண், தமிழ்புதல்வன் திட்டங்கள் மூலம் மாதம்தோறும் உதவித்தொகை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.

கல்லூரியில் சேர்ந்த பின்பு மாணவர்கள் கல்வி கற்பது மிகவும் கடினமாக இருக்கும் என்ற தவறான கண்ணோட்டத்தில் உள்ளனர். பள்ளி படிப்பைவிட கல்லூரி படிப்புதான் மிகவும் எளிதாக உள்ளது. கல்லூரி படிப்பின் போது பகுதி நேரம் வேலை செய்து கொண்டு கல்வி கற்கும் மாணவர்களும் உள்ளனர். எனவே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் கல்லூரியில் மாணவர்களுக்கு கல்வி கற்பதில் இருக்ககூடிய அறியாமையை போக்குவதுதான் ஆசிரியர்களின் மிக முக்கிய பணியாகும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார். இக்கூட்டத்தில் குடும்ப சூழ்நிலை, பொருளாதாரம், சரியான வழிகாட்டுதலின்மை, பாடப்பிரிவு கிடைக்காத நிலை போன்ற காரணங்களால் உயர்கல்வி தொடர முடியாமல் இருப்பதாக தெரிவித்த மாணவ, மாணவியர்களிடம், அரசின் மூலம் வழங்கப்படும் திட்டங்கள், சலுகைகள், ஊக்கத்தொகைகள், எதிர்கால வேலைவாய்ப்புகள், மதிப்பெண்களுக்கு ஏற்றவாறு பாடப்பிரிவு துறைகளை தேர்ந்தெடுப்பது உள்ளிட்டவை குறித்தும், தீர்வுகளை எடுத்துக்கூறியும், உயர்கல்வி தொடர்வதற்கான உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் வழங்கினார்.

Tags

Next Story