குமரி கடலோர பகுதியில் 256 மின்மாற்றிகள் சிறப்பு பராமரிப்பு
குமரி மாவட்டத்தில் முதற்கட்டமாக தேசியநெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலையோரம் உள்ள மின்மாற்றிகளில் சிறப்பு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கன்னியாகுமரி மின்பகிர்மான வட்டத்திற்கு கீழ் மொத்தம் 46 மின்விநியோக பிரிவு அலுவலகங்கள் உள்ளது. இந்த அலுவலகங்களின் கட்டுப்பாட்டில் மின்மாற்றிகள் வருகிறது. மின்மாற்றிகளை பராமரிக்க தமிழக அரசு மற்றும் தமிழக மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் முதற்கட்டமாக தேசியநெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலையோரம் உள்ள மின்மாற்றிகள் சிறப்பு பராமரிப்பு கடந்த 19ம் தேதி நடந்தது. இதில் மொத்தம் 848 மின்மாற்றிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 2வது கட்டமாக கன்னியாகுமரி முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை சாலைகளில் அமைந்துள்ள 256 மின் மாற்றிகளில் சிறப்பு பராமரிப்பு பணி ேநற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. கன்னியாகுமரி முதல் நீரோடி வரை மேற்கு கடற்கரை ஊர்களை உள்ளடக்கிய மின் மாற்றிகளில் சிறப்பு பராமரிப்பு மாலை 5 மணி வரை நடந்தது. மின்மாற்றிகள் பராமரிப்பு பணி முடியும் வரை அந்தந்த ஊர்களில் மின்தடை செய்யப்பட்டது. அடுத்து 3வது கட்டமாக வருகிற 5ம் தேதி சிறப்பு பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதில் நெடுஞ்சாலைகளில் விடுபட்ட மின்மாற்றிகள் பராமரிக்கப்பட இருப்பதாக மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் பத்மகுமார் தெரிவித்தார்.