நாகை: மகா சிவராத்திரி - சிறப்பு பூஜை
சிவராத்திரி
மாசி மாதத்தில் வரும் மகா சிவராத்திரியில், சிவனை வழிபட்டால்,ஓராண்டு முழுமையும் சிவபெருமானை வழிபட்டதற்கான பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். இதைத்தொடர்ந்து நேற்று மகாசிவராத்திரியையொட்டி திருமருகலில் உள்ள சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
திருமருகல் ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு மலர்களால் அலங்கரித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.பின்னர், இரவு 11 மணியளவில் 2-ம் கால பூஜை நடந்தது.கோவில் உள்ள லிங்கத்துக்கு மஞ்சள்,பால்,தயிர்,பஞ்சாமிர்தம், சந்தனம் போன்ற திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அதேபோல் திருப்புகலூர் அக்னீஸ்வரர் கோவில்,திருச்செங்காட்டங்குடி உத்தராபதீஸ்வரர் கோவில், சியாத்தமங்கை பிரம்மபுரீஸ்வரர் கோவில், விற்குடி விரட்டானேஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
அதேபோல் திருச்சங்காட்டங்குடியில் உள்ள சீதளமாரியம்மன் கோவிலில் மகா சிவராத்திரி முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்,சந்தன காப்பு அலங்காரம்,தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து இரவு அம்மன் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ஊராட்சி மன்ற தலைவர் வள்ளி கலியமூர்த்தி,ஒன்றியக்குழு உறுப்பினர் இளஞ்செழியன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி நடராஜன் மற்றும் கிராமவாசிகள் செய்திருந்தனர்.