சட்ட ஆணைக்குழுவில் ஜூன் 27-ந் தேதி சிறப்பு முன் அமர்வு
சட்ட ஆணைக்குழுவில் ஜூன் 27-ந் தேதி சிறப்பு முன் அமர்வு
உச்சநீதிமன்ற சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள அடையாளம் காணப்பட்ட தூத்துக்குடி மாவட்ட வழக்குகளை சமரச தீர்வு காணும் முறையில் தூத்துக்குடி சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் வருகிற 27-ந் தேதி முதல் சிறப்பு முன்அமர்வு நடைபெற உள்ளது. இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான ஐயப்பன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கான சிறப்பு லோக் அதாலத் எனப்படும் சிறப்பு மக்கள் நீதிமன்றம் வரும் ஜூலை 29-ந் தேதி முதல் ஆக. 3-ந்தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கூடிய அடையாளம் காணப்பட்ட தூத்துக்குடி மாவட்டம் சார்ந்த வழக்குகளின் விபரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளது. எனவே பொதுமக்கள் உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அடையாளம் காணப்பட்ட தங்களது வழக்கினை, சமரச முறையில் தீர்வு காணும் பொருட்டு, தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் சிறப்பு முன் அமர்வு வருகிற 27-ந்தேதி முதல் நடைபெற உள்ளது.
அந்த முன் அமர்வில் வழக்காடிகள் நேரிலோ அல்லது காணொலி வாயிலாக கலந்துகொண்டு தங்கள் வழக்குகளுக்கு தீர்வு காணலாம். மேலும் இந்த சிறப்பு மக்கள் நீதிமன்றம் முன்பாக முடித்துக் கொள்ளும் வழக்குகளுக்கு மேல் முறையீடு கிடையாது. இதன் மூலம் முடித்துக் கொள்ளப்படும் வழக்குகளுக்கு செலுத்தப்பட்ட நீதிமன்ற கட்டணம் முழுமையாக திரும்பப் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
எனவே வழக்காடிகள் மற்றும் பொது மக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்களது வழக்குகளுக்கு, விரைவாக சமரசமுறையில் தீர்வு காணலாம். மேலும் இந்த சிறப்பு மக்கள் நீதிமன்றம் குறித்து பொதுமக்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவினை நேரிலோ, dlsathoothukkudi@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ, 0461-2320222 என்ற தொலைபேசி வாயிலாகவோ அல்லது அருகாமையில் உள்ள வட்ட சட்டப்பணிகள் குழுவினை நேரில் அணுகி தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.