வைகாசி சனி சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர்!
நாமக்கல் நகரில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயிலில் வைகாசி சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. வைகாசி மாத சனிக்கிழமையை முன்னிட்டு நேற்று ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடத்தப்பட்டது.
அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, சாமிக்கு வடைமாலை சாத்தப்பட்டது. பால், எண்ணெய், பஞ்சாமிர்தம், மஞ்சள், சீயக்காய் மற்றும் நறுமண பொருட்களால் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.பின்னர் சிறப்பு தங்க கவச அலங்காரத்தில் ஆஞ்சநேயர் அருள்பாலித்தார்.
சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஆஞ்சநேயரை ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.இதேபோல் நாமக்கல் - சேலம் செல்லும் நெடுஞ்சாலையில் புதன்சந்தை அருகில் உள்ள நைனாமலை வரதராஜ பெருமாள் கோவில் அடிவாரத்தில் வீற்றிருக்கும் பக்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது. திரளான பக்தர்கள் அனுமனை வழிபட்டு சென்றனர்.