சிறப்புக் கோடைகால இளம் பசுமை ஆர்வலர் இயற்கை முகாம்

சிறப்புக் கோடைகால இளம் பசுமை ஆர்வலர் இயற்கை முகாம்
100 மாணவர்கள் கலந்து கொண்ட சிறப்புக் கோடைகால இளம் பசுமை ஆர்வலர் இயற்கை முகாம்
இராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரியில் நடைபெற்ற சிறப்புக் கோடைகால இளம் பசுமை ஆர்வலர் இயற்கை முகாமை மாவட்ட ஆட்சியர் பாரவையிட்டு ஆய்வு செய்தார்.

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்று வரும் அரசு பள்ளிகளில் பயிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 மாணவர்கள் கலந்து கொண்ட சிறப்புக் கோடைகால இளம் பசுமை ஆர்வலர் இயற்கை முகாம்- 2024 உண்டு உறைவிட பயிற்சி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் பார்வையிட்டு மாணவர்களிடையே உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் கூறுகையில்: விருதுநகர் மாவட்டத்தில், மாணவர்களின் தனித்திறமைகளை மேம்படுத்தும் வகையில் 02.05.2024 முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு பல்வேறு கோடைகால உண்டு, உறைவிடப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி திருவில்லிபுத்தூர் வி.பி.எம்.எம் பொறியியல் கல்லூரியில் 02.05.2024 முதல் 11.05.2024 வரை 100 மாணவர்களுக்கு ஆங்கில பேச்சுத் திறன் பயிற்சி முகாமும், 100 மாணவர்களுக்கு ஓவியக்கலை பயிற்சி முகாமும், விருதுநகர் எஸ்.எப்.எஸ். மெட்ரிக் பள்ளியில் 02.05.2024 முதல் 11.05.2024 வரை 50 மாணவர்களுக்கு இசை, பாடல் பயிற்சி முகாமும், சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் 02.05.2024 முதல் 11.05.2024 வரை 50 மாணவர்களுக்கு தலைமைப் பண்பு பயிற்சி முகாமும், செவல்பட்டி பி.எஸ்.ஆர் கல்லூரியில் 04.05.2024 முதல் 13.05.2024 வரை சிறப்புக் கோடைகால குறள் மாணவர்கள் பயிற்சி முகாமும் நடைபெற்று வருகிறது. இராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியில் 03.05.2024 முதல் 07.05.2024 வரை நடைபெற்று வரும் முகாமில் 100 மாணவர்களுக்கு இளம் பசுமை ஆர்வலர் பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது.

இப்பயிற்சி வகுப்பில் 6 முதல் 9 ஆம் வகுப்பு பயிலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடத்துடன் பயிற்சி அளிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் ஒரு ஆரோக்கியமான சுற்றுச்சூழல் வேண்டும் என்றால் அதற்கு காடுகளில் 33 சதவிகிதம் இருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. அந்த காடுகளில் பூச்சிகள், ஊர்வன, பறப்பன, விலங்குகள் உள்ளிட்ட அனைத்தும் சமநிலையில் இருந்தால் தான் உணவு சங்கிலி சமநிலையாக இருக்கும். இந்த சுற்றுச்சூழலில் ஓர் உயிரை அழிக்கும் போது, இன்னொரு உயிரின் பெருக்கம் அதிகமாகி, அதனால் இயற்கை பாதிப்பு ஏற்படுகிறது. நம்முடைய உணவு, காய்கறி தேவைகளுக்கு பூச்சிகள் மிகவும் அவசியம். இயற்கையை பாதுகாப்பது நம் ஒவ்வொருவருடைய கடமை. இயற்கையை பாதுகாப்பது குறித்த சிந்தனை உள்ள மாணவர்களாக நீங்கள் திகழ வேண்டும் என்பதற்கான இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

எனவே, மாணவர்கள் எதிர்காலத்தில் எந்த ஒரு துறையில் பணியில் இருந்தாலும் இயற்கை குறித்த புரிதலோடு, மற்றவர்களுக்கு எடுத்து கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தார். இப்பயிற்சியில் மாணவர்களுக்கு கருத்தாளர்களாக பணியாற்றிய ROAR மற்றும் ATREE தன்னார்வ அமைப்புகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

Tags

Next Story