தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு வார்டு

தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு வார்டு

மாவட்ட ஆட்சியர் 

வெப்ப அலை தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு வார்டு ஒதுக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

வெப்ப அலை தாக்கத்தால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு சிகிச்சை அளிக்க, தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனி சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது என தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் தெரிவித்தார்.

இது குறித்து, மேலும் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, வெப்ப அலையின் தாக்கம் அதிகரித்து வருவதால், தஞ்சாவூர் மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகமாகக் கூடும் இடங்கள், பேருந்து நிலையங்கள், மார்க்கெட்டுகள், சாலையோர இடங்கள், கிராம பஞ்சாயத்துகள் மற்றும் மாநகராட்சி,

நகராட்சி முக்கிய இடங்களில் தண்ணீர் பந்தல்கள் அமைத்து சுகாதாரமான குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், சுகாதாரமான குடிநீர் வழங்குவதுடன் கூடுதலாக ஓஆர்எஸ் பவுடர் எனப்படும் உப்புச் சர்க்கரை கரைசல் பவுடர் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெப்ப அலையின் தாக்கம் அதிகரித்து,

வருவதால், ஆற்றுப் படுகை போன்ற வனப்பகுதிகளில் காட்டுத்தீ ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை மேற்கொள்ளுமாறும், வன விலங்குகள் இருக்கும் இடங்களில் போதிய அளவில் தண்ணீர் வழங்கிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்காக அதிகமாகக் கூடும்,

கோவில்களில் சாமியான பந்தல்கள் அமைத்து குடிநீர் வழங்கிடவும், அனைத்து நியாய விலைக்கடைகளிலும் வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படாதவாறு சாமியான பந்தல்கள் அமைத்து, குடிநீர் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மருத்துவமனைகள் மற்றும் தொழிற்சாலைகளில் தீ பாதுகாப்பு தொடர்பான நிலையான வழிகாட்டி நெறிமுறைகள் செயல்படுத்தப்படுவதை கண்காணித்தல் மற்றும் தீ விபத்துக்களை தடுப்பதில் உரிமம் வைத்திருப்பவர்களை கண்டறிதல் ஆகிய பணிகளை மேற்கொள்ள மாவட்ட அளவிலான தீ மற்றும் தொழில்துறை பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக்குழுவினர் மருத்துவமனைகள் மற்றும் தொழிற்சாலைகளில் மின்கசிவு மற்றும் தீ விபத்துக்கள் ஏற்படாமலிருக்க ஆய்வுப்பணிகள் மேற்கொள்ள ஆணையிடப்பட்டுள்ளது. வெப்ப அலையின் தாக்கம் அதிகரித்து வருவதால் காட்டுத்தீ ஏற்படாமல் இருக்க மாவட்ட அளவிலான குழு நியமனம் செய்யப்பட்டு வனப் பகுதிகளை கண்காணித்திடவும் நிர்வகித்திடவும் ஆணையிடப்பட்டுள்ளது. மேலும், வெப்ப அலையின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு சிகிச்சையளித்திட ஏதுவாக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 10 படுக்கைகள் கொண்ட வார்டுகள் திறக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் வெப்ப அலை தாக்கம் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்திடவும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் தகவல், கல்வி மற்றும் தொடர்பு நடவடிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெறும் உள்நோயாளிகளுக்கு சுகாதாரமான பாதுகாப்பான குடிநீர் வழங்கிடவும், வெளிநோயாளிகளுக்கு உப்புச்சர்க்கரை கரைசல் வழங்கிடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கால்நடை வளர்ப்போருக்கு ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாம் விழிப்புணர்வு நடத்தப்பட்டுள்ளது. வெப்ப அலை தாக்கம் தொடர்பாக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள தொடர்புடைய துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story