குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியில் பேச்சுப் போட்டி
தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் மகாகவி பாரதியார் பிறந்த நாளை முன்னிட்டு பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் மற்றும் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரி ஆகியவை இணைந்து நடத்திய நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் ஜான்பீட்டர் தலைமை வகித்தார். கல்லூரி தேர்வு நெறியாளர் மலர்விழி, தமிழ்த் துறைத் தலைவர் வைஜெயந்திமாலா, பேராசிரியர் வெ.சுகுமாறன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
தொடர்ந்து பாரதியார் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு தமிழ்ப் பல்கலைக்கழக நாட்டுப்புறவியல் துறைத் தலைவர் காமராசு பரிசுகள் வழங்கினார். மேலும் போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவிகளுக்கும் பாரதியார் புத்தகம் மற்றும் சான்றிதழ் பரிசாக வழங்கப்பட்டது. தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் தமிழடியான் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் கரிகாலன் வரவேற்றார். தமிழ்த் துறை இணைப் பேராசிரியர் இந்திராகாந்தி நன்றி கூறினார்.