சோதனைகளை சாதனைகள் ஆக்கியவர் ஜெயேந்திரர் - எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் பெருமிதம்

சோதனைகளை சாதனைகள் ஆக்கியவர் ஜெயேந்திரர் - எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் பெருமிதம்

ஆராதனை விழா

முக்தி அடைந்த காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் ஆறாவது ஆண்டு ஆராதனை விழா

சோதனைகளை சாதனைகள் ஆக்கியவர் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் என்று எழுத்தாளர் இந்திரா சௌந்தர ராஜன் பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு. மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு சார்பில் முக்தி அடைந்த காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் ஆறாவது ஆண்டு ஆராதனை விழா மதுரை எஸ் எஸ் காலனி எஸ்.எம். கே. திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

விழாவில் எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் என்ற தலைப்பில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது . திருப்பதி பெருமாள் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர் ஸ்ரீ ஜெயேந்திரர். காலத்திற்கு ஏற்றார் போல் தன்னை மாற்றிக் கொண்டவர். பெரியவர் அனுமதியோடு சில மாற்றங்களை செய்தவர். நெருப்பாற்றில் நீந்தியவர். சோதனைகளை சாதனைகள் ஆக்கியவர் ஜெயேந்திரர். ராமஜென்ம பூமி உருவாவதற்கு மூல காரணம் ஸ்ரீ ஜெயந்திரர். சன்னியாசிகளுக்கு உடம்பு மறைந்தாலும் ஆத்மா மறைவதில்லை. அவர் இன்றும் நமக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கிறார். ஜனக் கல்யாண் அமைப்பு மூலம் பல்வேறு புனித பணிகளை மேற் கொண்டவர்.

ஜகத்குரு என்றவுடன் நமக்கு மகா பெரியவர் ஞாபகம்தான் வரும்.ஆனால் கிருஷ்ண பரமாத்மாதான் ஜகத்குரு என்று கூறுகிறார் மகா பெரியவர். அவதாரங்களில் சிறந்த அவதாரம், பரிபூரண அவதாரம் கிருஷ்ண அவதாரம். அவதாரம் என்றால் விண்ணில் இருந்து மண்ணிற்கு வந்து சொன்னதை செய்து காட்ட வேண்டும். உபதேசம் என்பது சொல்பவன் அதன்படி நடப்பவனாகவும், வாழ்ந்து காட்டுபவன் ஆகவும் இருக்க வேண்டும், தர்மத்தை எப்படி செய்ய வேண்டும்? தாய் தந்தையரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று சொன்னதை நிறைவேற்றியவர் ஸ்ரீராமன். நமது வாழ்க்கை கர்மாவால் ஆனது. ஒவ்வொரு வரும் பல்வேறு விதத்தில் வேறுபட்டவர்கள்.

இந்து மதத்தின் உயர்ந்த தூணாக கீதை இருக்கிறது. இதை தந்தவர் கிருஷ்ண பரமாத்மா. ராமகிருஷ்ண பரமஹம்சர் நமக்கு, உலகம் வீடு என்றால் பூஜை அறை பாரத தேசம் என்கிறார். உலகத்திற்கே கலாச்சாரத்தை கற்றுக் கொடுத்த மண் இந்தியா. உலகத்தில் கோவிந்த நாமா சிறந்தது அதனால் தான் ஆண்டாள் கோவிந்த நாம வை மூன்று முறை பாசுரத்தில் சொல்கிறாள். நம்மை கடைத்தேற்றுகிற நாமா அது. இவ்வாறு இந்திரா சௌந்தர் ராஜன் பேசினார்.

முன்னதாக ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் திருவுருவப்படத்திற்கு எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சிக்கு ராமேஸ்வரம் காஞ்சி சங்கர மடம் மேலாளர் ஆடிட்டர் சுந்தர், தலைமை தாங்கினார். எஸ்.எஸ். காலனி சத்சங்கம் செயலாளர் ஸ்ரீ ராமன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார்.

Tags

Next Story