ஸ்ரீபாலசுப்ரமணியர் கோயில் மகாகும்பாபிஷேகம்

ஸ்ரீபாலசுப்ரமணியர் கோயில் மகாகும்பாபிஷேகம்

கும்பாபிஷேக விழா

மலை மீது அமைந்துள்ள ஸ்ரீபால சுப்ரமணியர் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள கானலாபாடி கிராமத்தில் உள்ள மலை மீது அமைந்துள்ள ஸ்ரீபால சுப்ரமணியர் கோயில் புனரமைக்கப்பட்டு 21 ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று காலை கும்பாபிஷேக விழா நடந்தது. இதனை முன்னிட்டு நேற்று முன்தினம் காலையில் ஹோமகுண்டம் அமைத்து கலசங்களில் புனித நீர் நிரப்பப்பட்டு விக்னேஸ்வர பூஜை,கோ பூஜை, கணபதி ஹோமம், லட்சுமிஹோமம், நவக்கிரக ஹோமம், பூர்ணாதி, மகா தீபாராதனை நடந்தது. மாலையில் வாஸ்து சாந்தி, பிரவேச பலி, அங்குரார்ப்பணம், காப்பு கட்டுதல், கடங்கள் யாகசாலையில் எழுந்தருளல், யாகசாலை பூஜைகளும் தீபாராதனை நடத்தப்பட்டு பிரசாதங்களும் விநியோகிக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து நேற்று காலை 2ம் கால யாக பூஜை, எஜமான சங்கல்பம், நாடி சந்தானம், புண்ணியாக வாசனம்,ஜபம், பாராயணம், விசேஷ ஹோமங்கள், பூஜைகளும், தீபாராதனையும் நடந்தது. காலை 9.30மணிக்கு யாத்ரா தானமும் அதைத் தொடர்ந்து கடங்கள் புறப்படுதலும் நடந்தது. பின்னர் புனித நீர் நிரப்பப்பட்ட கலசத்தை மேளதாளத்துடன் கோயிலை சுற்றி வந்து செல்லப் பிராட்டி லலிதா செல்வாம்பிகை கோயில் சர்வசாதகர் ஈஸ்வர சிவம் கோவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றியும் தீபாராதனை காண்பித்தும் கும்பாபிஷேகம் நடத்தி வைத்தார். அப்போது கோயிலை சுற்றிலும் இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து கோயிலில் வீற்றிருக்கும் மூலவர் வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமான் மற்றும் உற்சவர்கள் விநாயகர்,ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமான் ஆகியவற்றுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையும், வழிபாடு, மகா தீபாராதனையும் நடந்தது. கும்பாபிஷேக விழாவில் சுற்றியுள்ள ஊர்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப் பெருமானை மனம் உருக வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் வாண வேடிக்கை, இன்னிசை கச்சேரியும் அதைத் தொடர்ந்து மேள தாளத்துடன் ஸ்ரீ வள்ளிதெய்வானை சமேத முருகப் பெருமான் வீதி உலாவும் நடந்தது. விழா ஏற்பாடுகளை நாட்டாமை ரேணு கவுண்டர்,ஊராட்சி மன்ற தலைவர் மல்லிகா சுப்ரமணியன், மலேசியாவைச் சேர்ந்த பிரகல் லட்சுமி,சுப்பிரமணியம் அஞ்சலை, ராமசாமி ராணி குடும்பத்தினர் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

Tags

Next Story