ஸ்ரீரங்கம் - இரட்டை பிரபை வாகனத்தில் நம்பெருமாள்
சிறப்பு அலங்காரம்
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வரும் மாசித் தெப்பத் திருவிழாவின் 5-ஆம் திருநாளான வெள்ளிக்கிழமை இரட்டை பிரபை வாகனத்தில் நம்பெருமாள் எழுந்தருளினாா். ஸ்ரீரங்கம் கோயிலில் திருப்பள்ளி ஓடம் எனும் தெப்பத் திருவிழா கடந்த 12 -ஆம் தேதி தொடங்கியது.
வரும் 20-ஆம் தேதி வரை 9 நாள்களுக்கு இந்த விழா நடைபெறுகிறது. விழாவில் ஒவ்வொரு நாளும் மாலை நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி உள்திருவீதி வலம் வந்து பக்தா்களுக்கு சேவை சாதிக்கின்றாா்.
விழாவின் 5-ஆம் திருநாளான வெள்ளிக்கிழமை மாலை இரட்டை பிரபை வாகனத்தில் நம்பெருமாள் எழுந்தருளி உள்திருவீதி வலம் வந்து பக்தா்களுக்கு சேவை சாதித்தாா். விழாவில், 6-ஆம் திருநாளான சனிக்கிழமை (பிப்.17) மாலை வெள்ளி யானை வாகனத்தில் நம்பெருமாள் எழுந்தருளுகிறாா். 7-ஆம் திருநாளான ஞாயிற்றுக்கிழமை மாலை நெல்லளவு கண்டருளும் வைபவம் நடைபெறவுள்ளது.
இதையொட்டி, அன்று மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் உபயநாச்சியாா்களுடன் சந்தனு மண்டபத்திலிருந்து புறப்பட்டு திருக்கொட்டாரத்தின் எதிரே உள்ள மண்டபத்தில் எழுந்தருளி நெல்லளவு கண்டருளுகிறாா்.பின்னா் அங்கிருந்து புறப்பட்டு உள்திருவீதி வலம் வந்து இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்று சேருகிறாா் நம்பெருமாள். விழாவின் 8-ஆம் திருநாளான வரும் 19-ஆம் தேதி முக்கிய நிகழ்வான தெப்பஉற்ஸவ விழா நடைபெறவுள்ளது. 9-ஆம் திருநாளான 20-ஆம் தேதி பந்தக்காட்சியுடன் விழா நிறைவடைகிறது.