ஸ்ரீரங்கம் : மோதலை கண்டித்து போராட்டம்
போராட்டம்
. திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு, தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். தற்போது, சபரிமலை யாத்திரை சீசன் என்பதால், கோவிலில் வழக்கத்தை விட, அதிகமான பக்தர்கள் கூட்டம் காணப்படுகிறது. இது தவிர, வைகுண்ட ஏகாதசி விழாவும், முதல் துவங்கி உள்ளது. ஏகாதசி விழா துவக்க நாளான நேற்று முன்தினம் காலை 7:00 மணியளவில், ரெங்கநாதரை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வரிசையில் சென்று கொண்டிருந்தனர். சபரிமலை யாத்திரைக்கு மாலை அணிந்திருந்த வெளி மாநில பக்தர்கள் சிலர், காயத்திரி மண்டபம் பகுதியில் வந்த போது, தற்காலிக ஊழியர்களுக்கும், பக்தர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அங்கிருந்த போலீசார், அவர்களை சமாதானப்படுத்த முயன்ற போது, இரண்டு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில், பக்தர்கள் தரப்பில் சென்னாராவ் உட்பட சிலரும், தற்காலிக ஊழியர்களான விக்னேஷ், , பரத், ஆகியோரும் காயமடைந்துள்ளனர். இதனால், வெளி மாநில பக்தர்கள் 25க்கும் மேற்பட்டோர் கோவில் வளாகத்துக்கு உள்ளேயே, கோவில் ஊழியர்கள் மற்றும் போலீசாரை கண்டித்து கோஷமிட்டனர். கோவில் நிர்வாகிகளும், போலீசாரும் அவர்களை சமாதானப்படுத்தி, அனுப்பி வைத்தனர். அதன் பின், கோவில் நடை அடைக்கப்பட்டு, கைகலப்பு ஏற்பட்ட இடம் சுத்தம் செய்யப்பட்டு, பரிகார பூஜைக்கு பின், மீண்டும் நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்குள், பக்தர்கள் தாக்கப்பட்டதாக தகவல் பரவியதால், மாலை, ரெங்கா ரெங்கா கோபுரம் முன், ஹிந்து முன்னணி, விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பா.ஜ., கட்சியினர், அறநிலையத் துறையினரை கண்டித்தும், பக்தர்களை தாக்கியவர்கள் மீது நடநவடிக்கை எடுக்க வேண்டும், என்று வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, ராஜகோபுரம் முன், போராட்டத்தில் ஈடுபட்ட ஹிந்து முன்னணி கோட்ட செயலாளர் போஜராஜன், விஷ்வ ஹிந்து பரிஷத் தென் மாநில அமைப்பாளர் சேதுராமன் மற்றும் பா.ஜ., கட்சியின் நிர்வாகிகள் 200 பேரை போலீசார், கைது செய்து அருகில் உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர்.
இது குறித்து, ஹிந்து முன்னணி கோட்ட செயலாளர் போஜராஜன் கூறுகையில்: ஸ்ரீரங்கம் கோவில், ரெங்கநாதர் சன்னதி முன், ரத்த அபிேஷகம் செய்தது போல் நடந்துள்ளது. சம்பவம் குறித்து கேட்க சென்ற போது, அதிகாரிகள் பேசக் கூடத் தயாராக இல்லை. ஐயப்ப பக்தர்களை அடித்து, ரத்தம் சிந்த வைத்துள்ளனர். பக்தர்கள் தவறு செய்திருந்தால், சி.சி.டி.வி., கேமரா பதிவுகளை காட்டி நிரூபித்திருக்க வேண்டும். ஐயப்ப பக்தர்கள் தவறு செய்ததாக கூறும் அறநிலையத் துறை அதிகாரிகள், சம்பவம் குறித்த உண்மையை சொல்லாவிட்டால், போராட்டம் தொடரும், என்றார்.