ஸ்ரீவில்லிபுத்தூர்:வீட்டின் பூட்டை உடைத்து 22 பவுன் நகை திருட்டு
ஸ்ரீவில்லிபுத்தூர் - சிவகாசி சாலையில் மாவட்ட நீதிமன்றம் வளாகம் முன்பு முல்லை நகர் பகுதியில் உள்ள வீட்டில் சமுத்திரக்கனி மற்றும் அவரது மனைவி குடியிருந்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் . சமுத்திரக்கனி ஜமீன் கொல்லம் கொண்டான் அரசு மருத்துவமனையில் ஓட்டுநராக பணிபுரிந்து கடந்த 2019 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றுள்ளார். இவரது மகன்கள் இரண்டு பேர் சென்னையில் ஐடி கம்பெனியில் பணிபுரிந்து வருவதால் சமுத்திரக்கனி மற்றும் இவரது மனைவி ஆகியோர் சென்னையில் உள்ள மகன் வீட்டுக்கு கடந்த ஐந்து நாட்கள் முன்பு சென்றுள்ளனர். இந்த நிலையில் இன்று காலை சமுத்திரக்கனி வீடு பூட்டு உடைந்து இருப்பதை பார்த்து வீட்டின் அருகில் உள்ளவர்கள் சமுத்திரக்கனிக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து சமுத்திரக்கனி ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். வீட்டிற்கு சென்று போலீசார் சோதனை செய்ததில் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 22 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சமுத்திரகனி புகார் அளித்ததின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். குற்றவாளிகளை தேடி வருகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூரில் கடந்த ஆறு மாதங்களாக தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடைபெற்றது இதுவரை போலீசார் கண்டுபிடிக்கவில்லை என்பது குறிப்பிடப்பட்டுள்ளது