எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு!
வேலூர்
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 26-ந் தேதி தொடங்கி கடந்த 8-ந் தேதி வரை நடந்தது. இந்த தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் (மே) 10-ந் தேதி வெளியாக உள்ளது.
இதையொட்டி விடைத்தாள்கள் திருத்த மாவட்டம் வாரியாக விடைத்தாள் திருத்தும் மையங்கள் அமைக்கப்பட்டன.
அதன்படி, வேலூர் மாவட்டத்தில் காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, குடியாத்தம் செயின்ட் ஜான்ஸ் பள்ளி ஆகிய மையங்களில் கடந்த 12-ந் தேதி விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது.
நாடாளுமன்ற தேர்தல் பணி காரணமாக, விடைத்தாள் திருத்தும் பணிக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது.
இதன்காரணமாக, ஏற்கனவே திட்டமிட்டப்படி கடந்த 22-ந் தேதியுடன் விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
தொடர்ந்து, விடைத்தாள் திருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு நேற்றுடன் முடிவடைந்தது. அட்டவணையாளர் மற்றும் மதிப்பெண் சரிபார்க்கும் அலுவலர்கள் மூலமாக, விடைத்தாளில் உள்ள மதிப்பெண் விவரங்கள் சரிபார்க்கப்படும்.
அதன்பின் அரசு தேர்வுகள் துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.