நரிக்குறவர் இன மக்கள் 75 பேருக்கு எஸ்டி சாதிச்சான்றிதழ்

நரிக்குறவர் இன மக்கள்  75 பேருக்கு எஸ்டி சாதிச்சான்றிதழ்

சாதி சான்றிதழ் வழங்கிய துணை சபாநாயகர் 

திருவண்ணாமலையில் நரிக்குறவர் இன மக்கள் 75 பேருக்கு எஸ்டி சாதிச்சான்றிதழை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வழங்கினார்.

திருவண்ணாமலை தாலுக்கா அலுவலக வளாகத்தில் வருவாய்த்துறை பேரிடர் மேலாண்மைதுறை சார்பில் கீழ்பென்னாத்தூர் தொகுதிக்குபட்ட துரிஞ்சாபுரம் அருகே உள்ள கொண்டம் காரியந்தல் கிராமத்தில் வசிக்கும் நரிக்குறவர் இன மக்களுக்கு எஸ்டி சாதிச்சான்று வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவுக்கு கோட்டாட்சியர் ஆர்.மந்தாகினி தலைமை தாங்கினார். முன்னாள் துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் வி.பி.அண்ணாமலை சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பரிமளா ஆகியோர் முன்னிலை வகிக்க, தாசில்தார் மு.தியாகராஜன் அனைவரையும் வரவேற்றார்.

இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ் நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த 75 பேருக்கு எஸ்டி சாதி சான்று வழங்கி விழா பேருரையாற்றுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று இரண்டே முக்கால் ஆண்டு ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தி வருகிறார். இதற்கு எடுத்துக்காட்டுதான் இன்றைக்கு நரிக்குறவ இன மக்களுக்கு எஸ்டி சாதிச்சான்று வழங்கும் ஒரு சிறப்பு நிகழ்ச்சியாகும்.

முதலமைச்சரின் அறிவுறுத்தலின்பேரில் அரசின் திட்டங்களை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம். நாடோடிகளாக வாழ்ந்து வரும் நரிக்குறவ இன மக்களுக்கு தங்குவதற்கு இருப்பிட வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இன்றைக்கு எஸ்டி சாதிச்சான்றுகள் மூலம் செயல்படுத்தப்படும் ஏராளமான சலுகைகள் நரிக்குறவ இன மக்களுக்கு வழங்கப்படும். அரசு மூலம் ரூ.4.50 லட்சம் மதிப்பில் அனைவருக்கும் இலவசமாக வீடு கட்டி தரப்படும். உங்கள் குழந்தைகள் சிறப்பாக படித்தால் வேலைகள் கிடையாது. எனவே உயர்கல்வியான மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட படிப்புகளை படிக்க வேண்டும். இதற்காக ஒன்றிய, மாநில அரசுகள் உதவிகள் செய்து வருகிறது. தொழில் செய்ய கடனுதவிகளும் வழங்கப்படுகிறது. இன்றைக்கு நரிக்குறவர் இன மக்களுக்கு என தனிகவனம் செலுத்தி வருகிறார்.தமிழக முதல்வர். எனவே இந்த சாதிச்சான்றிதழ் மூலம் அரசு அனைத்து சலுகைகளும் பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு அவர் பேசினார்.

இந்த விழாவில் வட்ட வழங்கல் அலுவலர் துரைராஜ், மண்டல துணை தாசில்தார் மஞ்சுநாதன், பொதுக்குழு உறுப்பினர் பாலு,வருவாய் ஆய்வாளர்கள் அமுதா ,எஸ்.சுதா கிராம நிர்வாக அலுவலர்கள் சீனுவாசன், அ.ஏழுமலை ,கே.காமேஷ்குமார், விஜயராஜ் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் நரிக்குறவர் இன மக்கள் கலந்து கொண்டனர். முடிவில் துரிஞ்சாபுரம் மண்டல துணை தாசில்தார் ஜெ.ரமேஷ் நன்றி கூறினார்.

Tags

Next Story