மாநில அளவிலான கால்பந்து போட்டி

பரிசு வழங்கல்
சேலம் ஜான்சன் நண்பர்கள் குழு சார்பில் 21-வது ஆண்டு மாநில அளவிலான கால்பந்து போட்டி கடந்த 4 நாட்களாக சேலம் மரவனேரியில் உள்ள செயிண்ட்பால் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 32 அணிகள் கலந்து கொண்டு விளையாடின
. போட்டிகள் முடிவில், முதல் இடத்தை ஜான்சன் நண்பர்கள் குழு கால்பந்து அணி பிடித்தது. 2-ம் இடத்தை அவரஞ்சி அணியும், 3-ம் இடத்தை போலீஸ் அணியும், 4-ம் இடத்தை சேலம் சிறுமலர் மேல்நிலைப்பள்ளி அணியும் பிடித்தன. பின்னர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கைப்பந்து கழக செயலாளர் சண்முகவேல் வரவேற்றுப்பேசினார். பள்ளி தலைமை ஆசிரியர் அலெக்ஸ்பிரபு தலைமை தாங்கினார். ஜான்சன் நண்பர்கள் குழு செயலாளர் சக்திவேல், இணை செயலாளர் சுரேஷ்குமார், என்ஜினீயர் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக வன அலுவலர் பெரியசாமி, சேலம் மாநகர் நுண்ணறிவு பிரிவு போலீஸ் உதவி ஆணையர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டி பேசினர். முடிவில் குழு தலைவர் எபி.ராஜ்குமார் நன்றி கூறினார்.
