மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா அறிக்கை
நீட் தேர்வு என்ற கல்வி மோசடி இனியும் தொடர அனுமதிக்கக் கூடாது என மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நீட் தேர்வு என்ற கல்வி மோசடி இனியும் தொடர அனுமதிக்கக் கூடாது மனித நேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம் ஹெச் ஜவாஹிருல்லா. எம்எல்ஏ வெளியிடும் அறிக்கை தமிழ் நாட்டின் மாணவக் கண்மணிகளின் மருத்துவக் கனவினைக் கானல் நீராக்கும் நீட் தேர்வை அனுமதிக்க முடியாது எனத் தமிழ்நாடு தொடக்கம் முதலே குரல் எழுப்பி வருகிறது. தமிழ்நாடு சட்டமன்றத்திலும் இது தொடர்பாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அகில இந்திய அளவில் முறைகேடுகள் நிறைந்த அந்தத் தேர்வு முறையால் பல மாணவச் செல்வங்கள் தம் இன்னுயிரை இழந்துள்ளனர். 12 ஆண்டு காலம் தரமான பள்ளிக் கல்வி பயின்று 600 க்கு 600 மதிப்பெண் பெற்றாலும் மருத்துவக் கல்லூரியில் நுழைய முடியாது. பல லட்சங்கள் கொட்டி சில மாதங்கள் பயிற்சி நிலையத்தில் கற்றால் மட்டும் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கும் என்றால் அது கல்வியா இல்லை வர்த்தகமா என்ற வேதனை வினாக்கள் ஒரு புறம் எழும்பிக் கொண்டேயிருக்கின்றன.
வேறு வழியின்றி லட்சக்கணக்கில் செலவு செய்து நடுத்தர ஏழை வீட்டுப் பிள்ளைகள் பயிற்சி நிலையங்களில் சேர்ந்து வெற்றி வாகை சூடும் நிலையை எட்டியும் கூட அவர்களின் உழைப்பைக் கேலிசெய்யும் விதமாக முகத்தில் கரி பூசும் விதமாக நாடெங்கும் தேர்வுக்கு முன்பே வினாத்தாள்கள் வெளியாகி அந்தத் தேர்வின் நம்பகத்தன்மையைக் கேள்விக் குறியாக்கியுள்ளது. தகுதி திறமை அடிப்படையில் மாணவர்களைத் தேர்வு செய்யவே நீட் தேர்வு என்று ஒன்றிய அரசு கூறி வந்தது. ஆனால் பணம் படைத்தவர்கள் மட்டும் மருத்துவர் ஆவதற்குக் குறுக்கு வழியாக நீட் தேர்வு அமைந்துவிட்டது என்பது நிரூபணம் ஆகி உள்ளது. வட மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்குவது முதல் வினாத்தாள் வழங்குதல் வரை பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
பீகார் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் முறைகேட்டில் ஈடுபட்டதாகப் பெற்றோர்கள் மாணவர்கள் தேர்வு நடத்தும் அதிகாரிகள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு இருப்பதாகத் தெரிய வருகிறது. ராஜஸ்தானில் முழு மதிப்பெண்கள் பெற்ற 11 நபர்களில் 8 நபர்கள் ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதி இருப்பதும் அந்த மாணவர்களின் தேர்வு எண்கள் அடுத்தடுத்து அமைந்திருப்பதும் தேர்வில் மோசடி நடைபெற்று இருப்பதை உறுதி செய்கிறது. கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவு தொடர்ந்து நீட் தேர்வினால் தவிடுபொடியாகி வருகிறது. நீட் மறு தேர்வு நடத்த வேண்டும் என்று தேசியத் தேர்வு முகமைக்கு 2000 மாணவர்கள் கடிதம் எழுதி இருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். கருணை மதிப்பெண் வழங்கியதிலும் குளறுபடிகள் மிக அதிகமாக உள்ளது. நாட்டின் மருத்துவத் தலைநகரமாகத் தமிழ்நாடு விளங்குகின்றது. நாட்டிலேயே தலைசிறந்த மருத்துவர்கள் தமிழ் நாட்டில் தான் உள்ளார்கள்.
இவர்களில் பெரும்பாலானவர்கள் நீட் தேர்வு நடைமுறையாவதற்கு முன்பே மருத்துவம் பயின்றவர்கள். எனவே மருத்துவக் கல்வியின் தரம் குறித்து தமிழ்நாட்டிற்கு யாரும் பாடம் கற்றுத்தரத் தேவையில்லை. நேர்மையற்ற நீட் தேர்வு மோசடி தமிழ்நாட்டுக்குத் தேவையில்லை . நீட் தேர்வை நடத்தும் தேசியத் தேர்வு முகமை தனது நம்பகத்தன்மையை இழந்துவிட்டது. தமிழ்நாட்டிலும், நீட்டை விரும்பாத இதர மாநிலங்களிலும் மருத்துவ மாணவர் சேர்க்கையை மாநில அரசுகளே நடத்திக் கொள்வதற்கான உரிமைகள் வழங்கப்பட வேண்டும். சமநிலையை ஒழிக்கத் துடிக்கும் நவீனத் தீட்டான நீட் ஒழிக்கப்பட வேண்டும். நீட் தேர்வு மோசடியாளர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். பாசிசத்தின் பரிணாம வளர்ச்சிக்குச் சான்றாக விளங்கும் நீட் மோசடி தேர்வைத் தமிழ்நாட்டு மக்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் . இப்படிக்கு எம் எச் ஜவாஹிருல்லா தலைவர் மனிதநேய மக்கள் கட்சி