ஊராட்சி தலைவர் வீட்டில் கல்வீச்சு; 20 பேர் மீது வழக்குப்பதிவு!!
கல்பாக்கம் அடுத்த கடலூர் ஊராட்சியில் கடலூர் பெரிய குப்பம், சின்ன குப்பம், ஆலிகுப்பம் உள்ளிட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. இதில், கடலூர் பெரிய குப்பம் மீனவர் பகுதியைச் சேர்ந்த ஆதிலட்சுமி ஞானவேல் என்பவர் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், ஊராட்சி மன்ற தலைவரின் மகன் அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வருவதாகவும், அதை அந்த கிராமத்தைச் சேர்ந்த சிலர் எச்சரித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. கடந்த மாதம் அங்குள்ள அம்மன் கோயிலில் திருவிழா நடைபெற்றது. அப்போது ஊராட்சி மன்ற தலைவர் தரப்புக்கும், மற்றொரு தரப்புக்கும் மோதல் ஏற்பட்டது. பின்னர் அதன் தொடர்ச்சியாக கடந்த வாரம் மீண்டும் ஊராட்சி மன்ற தலைவர் தரப்பினருக்கும், மற்றொரு தரப்பினருக்குமிடையே வாக்குவாதம் மற்றும் கடும் மோதல் ஏற்பட்டது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அவரது கணவரின் அண்ணனான சேகர் ஆகியோரின் வீடுகள் மீது கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.இதில் சேகருக்கு பலத்த காயம் ஏற்பட்டதுடன், ஊராட்சி தலைவர் மற்றும் சேகர் ஆகியோர் வீட்டிலிருந்த டி.வி. உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் உடைக்கப்பட்டன. இது சம்பந்தமாக ஊராட்சி தலைவர் தரப்பில் கூவத்தூர் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கடலூர் பெரியகுப்பத்தைச் சேர்ந்த 20 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எதிர்தரப்பினர் கூறுகையில் ‘‘ஊராட்சி தலைவருக்கு சாதகமாக போலீசார் செயல்படுவதால், நாங்கள் மீன்பிடி தொழிலுக்கு கூட செல்ல முடியாமல் தலைமறைவாக இருந்து அவதிப்படுகிறோம்’’ என்றனர்.