குடிபோதையில் அரசு பஸ் மீது கல்வீச்சு - 2 வாலிபர்கள் கைது
கல் வீசியவர்கள் கைது
திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு நேற்று முன்தினம் மாலை சுமார் 4.45 மணி அளவில் தமிழக அரசு பஸ் புறப்பட்டு சென்றது. சுமார் 5.30 மணி அளவில் இந்த பஸ் நெய்யாற்றின்கரை டிபி சந்திப்பு அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென பஸ் மீது கல்வீசப்பட்டது. இதில் பஸ்சின் பின்பக்க கண்ணாடி நொறுங்கியது. இது குறித்து பஸ் கண்டக்டர் நெய்யாற்றின்கரை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். தொடர்ந்து அந்தப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை பரிசோதித்தபோது இரண்டு வாலிபர்கள் பஸ் மீது கல் வீசியது தெரியவந்தது. போலீசாரின் தீவிர விசாரணையில் கல் வீசியது நெய்யாற்றின்கரை அருகே உள்ள பெரும்பழுதூர் பகுதியை சேர்ந்த அகில் (29) மற்றும் மேலாரியோடு பகுதியை சேர்ந்த அனந்து (22) என்பது தெரியவந்தது. 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். குடிபோதையில் பஸ் மீது கல் வீசியதாக இவர்கள் போலீசிடம் தெரிவித்தனர். விசாரணைக்குப் பிறகு இருவரையும் போலீசார் நெய்யாற்றின்கரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.