கல்குவாரி வெடி விபத்து - மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட உயிரிழந்தவர்கள் உடல்
மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட உடல்கள்
விருதுநகர் மாவட்டம் ஆவியூர் அருகே உள்ள தனியார் கல்குவாரியில் லாரியில் இருந்து குடோனுக்கு வெடிபொருள் மாற்றிக் கொண்டிருந்தபோது எதிர் பாராத விதமாக திடீரென வெடி விபத்து ஏற்பட்டு மூன்று தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். இதை எடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் விபத்து நடந்த பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தை தண்ணீரை பீச்சி அடித்தனர். அதனைத் தொடர்ந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் பாகங்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன.
தீயணைப்பு மீட்பு வீரர்கள் மற்றும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சிதறி கிடந்த உடல் பாகங்களை சேகரித்து மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். இந்த வெடி விபத்தில் மதுரை மாவட்டம் டி. புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அழகர்சாமி மகன் கந்தசாமி மற்றும் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த முள்ளிகுளத்தை சேர்ந்த சீனி பாண்டியன் மகன் பெரியதுரை மற்றும் செந்தட்டியாபுரம் அருகன் குலத்தைச் சேர்ந்த ராஜாமணி மகன் குருசாமி ஆகியோர் வெடிவிபத்தில் உயிரிழந்துள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரிய வருகிறது.
வெடி விபத்து நிகழ்ந்த தனியார் கல்குவாரி உரிமையாளர் மற்றும் லைசன்ஸ் பெற்ற ஆவியூர் சேதுராமன் ராஜபாளையம் ராஜ்குமார் ஆகியோர் மீது நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உழைப்பாளர் தினத்தன்று வெடிவிபத்தில் மூன்று அப்பாவி தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் விருதுநகர் மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.