திருச்செங்கோட்டில் இளவட்டக்கல் தூக்கும் போட்டி
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சி நெசவாளர் காலனி பகுதியில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான இளவட்டக்கல் தூக்கும் நிகழ்ச்சி இரண்டாவது ஆண்டாக நடந்தது.சங்க காலம் தொட்டு இளவட்ட கல்லை தூக்குபவர்களுக்கு மட்டுமே திருமணத்திற்குபெண் கொடுக்கும் நிலை இருந்து வந்த நிலையில் படிப்படியாக இந்த கலை அழிந்து வரும் சூழலில்,
இன்னும் பல்வேறு கிராமங்களில் மட்டுமே ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்து வரும் நிலையில், நகரப் பகுதியில் குறிப்பாக திருச்செங்கோடு நகராட்சி ஐந்தாவது வார்டு நெசவாளர் காலனி பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த இளவட்டக்கல் தூக்கும் போட்டி நடந்து வருகிறது.
இந்த ஆண்டு பொங்கல் திருவிழாவை ஒட்டி நடந்த போட்டிகளை நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ் பாபு, நாமக்கல் மேற்கு மாவட்ட பாமக செயலாளர் சுதாகர்,தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சிக்கு வந்த அனைவரையும் ஐந்தாவது வார்டு நகர் மன்ற உறுப்பினர் W.T.ராஜா வரவேற்றார் ஊர்நல கமிட்டி தலைவர் பாஸ்கரன் நன்றி கூறினார்,நிகழ்ச்சியில் 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் 86 கிலோ எடை கொண்ட இந்த கல்லை தோளுக்கு மேல் தூக்கி பின்பக்கமாக போடும் முயற்சியில் ஈடுபட்டனர். அதில் ஒரு சில இளைஞர்களே வெற்றி பெற்றனர்.
அதிலும் அதிகப்படியான எண்ணிக்கையில் தூக்குபவர்களுக்கு பரிசு என அறிவிக்கப்பட்டிருந்ததால் மாறி மாறி தூக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். முதல் பரிசை வென்றவருக்கு 40 இன்ச் எல் இ டி டிவி பரிசாக வழங்கப்பட்டது