புயல் மீட்பு பணி : சென்னை புறப்பட்ட 225 தூய்மை பணியாளர்கள்
மீட்பு பணிகளை மேற்கொள்ள செல்லும் பணியாளர்கள்
சென்னையில் “மிக்ஜம்“ புயல் காரணமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் பெரும்பாலான சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இந்த மழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் அங்கு மீட்பு பணிகளுக்காக சென்னைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு உள்ளனர்.
அதன்படி, சேலம் மாவட்டத்தில் இருந்து ஒரு தீயணைப்பு வாகனத்தில் நிலைய அலுவலர்கள் சேகர், ரமேஷ்பாபு ஆகியோர் தலைமையில் 15 பேர் சென்னைக்கு புறப்பட்டு சென்றனர். அவர்கள் அங்கு உயர் அதிகாரிகள் ஆலோசனையின் பேரில் மீட்பு பணியில் ஈடுபட உள்ளனர் என்று தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோல் மாநகராட்சி சார்பில் தூய்மை பணியாளர்கள் 225 பேர் சுகாதார ஆய்வாளர்கள் ஆனந்தகுமார், சதீஷ்குமார் தலைமையில் சென்னைக்கு 2 பஸ்களில் புறப்பட்டனர். அவர்கள் தூய்மை பணி மற்றும் சாக்கடை அடைப்புகளை சரி செய்வதற்கு தேவையான உபகரணங்களை எடுத்து சென்றனர். முன்னதாக தூய்மை பணியாளர்களை மேயர் ராமச்சந்திரன், ஆணையாளர் பாலச்சந்தர் ஆகியோர் வழி அனுப்பி வைத்தனர். அப்போது, பாதுகாப்புடன் எப்படி மீட்பு பணியில் ஈடுபட வேண்டும்? என்பது குறித்து தூய்மை பணியாளர்களுக்கு அதிகாரிகள் அறிவுரை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் துணை ஆணையாளர் அசோக்குமார், மாநகர் நல அலுவலர் யோகான்ந் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.