8 ஆண்டுகளாக மின்சார வசதியின்றி இருட்டில் வசிக்கும் வினோத கிராமம்
காங்கயத்தில் 8 வருடங்களாக மின்சாரமின்றி, தகர கொட்டகையில் எந்தவொரு வசதிகளுமின்றி இருட்டுக்குள் 95 குடும்பங்கள் வசித்து வருகின்றன. மின்வாரியத்திற்கு டெபாசிட் பணம் கட்டியும் 1 வருடத்திற்கு மேலாக கண்டு கொள்ளாத துறை அதிகாரிகளால் பொதுமக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றனர். உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மின்வாரிய அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், காங்கயம் அடுத்த படியூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஒட்டங்காடு பகுதியில் கடந்த 2016ஆம் ஆண்டு குடியிருக்க வீடுகள் இல்லாத சுமார் 95 குடும்பங்களுக்கு அரசு இலவச வீட்டுமனைகளை வழங்கியுள்ளது. இங்கு அனைத்து சமுதாயத்தினரும் ஒன்றுகூடி வாழ்வதற்காக ஒவ்வொரு குடும்பத்திற்கும் சுமார் 3 சேன்ட் அளவுள்ள வீட்டுமனையை பட்டாவுடன் இலவசமாக பொதுமக்களுக்கு வழங்கியுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு பொதுமக்களுக்கு பட்டா கொடுக்கப்பட்ட பிறகு 2017ஆம் ஆண்டு ஒரு சிலர் அப்பகுதியில் வீடுகளை கட்டத் தொடங்கியுள்ளனர். ஆனால் அதன் பின்னர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் எந்தவொரு வசதிகளையும் செய்து தரவில்லை என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து 6 வருடங்களுக்கு பிறகு கடந்த 2023ஆம் ஆண்டு மின்சார கம்பங்கள் மற்றும் குடிநீர் குழாய் இணைப்பு இல்லாத அந்த பகுதிக்கு மின்வாரிய அலுவலகம் மின் இணைப்புக்கு டெபாசிட் பணம் கட்டுமாறு சம்பந்தப்பட்ட வீட்டு உரிமையாளர்களுக்கு கூறியுள்ளனர்.
இதனை அடுத்து சுமார் 10 வீட்டு உரிமையாளர்கள் கடந்த வருடம் ரூ. 5200 வரை டெபாசிட் பணம் செலுத்தியுள்ளனர். ஆனால் அதிகாரிகளின் அலட்சியத்தினால் இன்று வரை எந்தவொரு கம்பங்களும் அப்பகுதி அமைக்கப்படவில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் கடந்த டிசம்பர் மாதம் இது போன்று கட்டப்பட்டுள்ள சுமார் 30 வீட்டிற்கு சொத்துவரி விதிக்கப்பட்டு பொதுமக்களிடம் வரி வசூலிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து கடந்த 6 மாதத்திற்கு முன்பு மின்வாரிய அதிகாரிகள் பொதுமக்களிடம் வரி செலுத்த வேண்டும் அதன் பின்னரே மின் இணைப்புகள் அமைத்து தரமுடியும் என கூறியதை அடுத்து பலர் எந்தவொரு வசதிகளும் இல்லாத அந்த காட்டிற்குள் வீடுகளை கட்டி வருகின்றனர். இதனை அடுத்து தற்போது வரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் சுமார் 6 மாதத்திற்கும் மேலாக சுமார் 35 குடும்பங்கள் தண்ணீரின்றி, மின்வசதிகளின்றி தினசரி இருட்டில் வாழ்ந்து கொண்டு ஏமாற்றமடைந்துள்ளனர்.
இந்த குடும்பங்களில் வயதான பெரியோர்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் வாழ்ந்து வருவதால் தினசரி இருட்டில் வாழ முடியாமல் தத்தளித்து வருவதாகவும், அவசர தேவைக்கு வெளிச்சம் கூட இல்லாமல் எந்தவொரு வேலையும் செய்யமுடியவில்லை எனவும், மாலை மற்றும் நல்லிரவில் காட்டுக்குள் இருந்து விசப்பூச்சிகள், ஊர்வன ஆகியவை வீட்டிற்குள் வந்துவிடுவதாகவும் இதனால் இப்பகுதியில் வாழும் பொதுமக்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது எனவும் கூறியதை அடுத்து இது சம்பந்தப்பட்ட காங்கயம் மின்வாரிய அலுவலகத்திற்கும் உடனடியாக இப்பகுதியில் மின் இணைப்புகளை அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.