நடைபாதை வியாபாரிகள் கடைகள் வழங்க கோரிக்கை

நடைபாதை வியாபாரிகள் கடைகள் வழங்க கோரிக்கை
சாலையோர நடைபாதை வியாபாரிகளுக்கு வழங்க வேண்டிய கடைகள்
மதுராந்தகத்தில் சாலையோர நடைபாதை வியாபாரிகள் கடைகள் வழங்க கோரிக்கை வைத்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் நகராட்சி அலுவலக வளாகத்தில், சாலையோர நடைபாதை வியாபாரிகளுக்கு வழங்க வேண்டிய கடைகள், வழங்கப்படாமல் அடுக்கி வைக்கப்பட்டுள்ளதால், அவை வீணாகி வருகின்றன.

மதுராந்தகம் நகராட்சி, 24 வார்டுகளை உள்ளடக்கியது. ஜி.எஸ்.டி., சாலை, தேரடி தெரு, மருத்துவமனை சாலை, சூணாம்பேடு சாலை உள்ளிட்ட பகுதிகளில், சாலையோர நடைபாதை வியாபாரிகள் கடை வைத்துள்ளனர். இதனால், வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில், போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும்.

இதை தவிர்க்கும் விதமாக, நகராட்சியின் சார்பாக, சாலையோர நடைபாதை வியாபாரிகளுக்கு வழங்கப்படுவதற்காக, 20 கடைகள் நகராட்சி அலுவலக வளாகத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அவை, கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக, நடைபாதை வியாபாரிகளுக்கு வழங்கப்படாமல் வீணாகி வருகின்றன. இதனால், அலுவலக வளாகத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள கடைகளில், பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகள் தங்கும் இடமாக மாறி வருகிறது.

இது குறித்து, மேலும் தகவல் கேட்டறிய, மதுராந்தகம் நகராட்சி கமிஷனரை தொடர்பு கொண்ட போது, தொடர்பு கிடைக்கவில்லை. எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, வீணாகி வரும் கடைகளை நடைபாதை வியாபாரிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Tags

Next Story