சட்டவிரோத பட்டாசு உற்பத்தி, விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை

சட்டவிரோத பட்டாசு உற்பத்தி, விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை
X

ஆட்சியர் ஜெயசீலன் 

உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும் நபர்கள் மீது காவல்துறையின் மூலம் குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்டத்தில், சட்டவிரோதமாக வீடுகளிலும், அனுமதி பெறாத இடங்களிலும் வெடிகள் பட்டாசுகள் தயாரிப்பை தடுக்கும் பொருட்டு, மாவட்ட ஆட்சியர் தலைமையில், பட்டாசு உற்பத்தியாளர்களின் அனைத்து சங்கங்கள்; மற்றும் தொடர்புடைய அலுவலர்களை ஒருங்கிணைந்து ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு உற்பத்தி தொழிற்சாலைகள் மற்றும் உரிய அனுமதியின்றி பட்டாசு தயாரிக்கும் இடங்களில் சமீப காலங்களாக விபத்துக்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் அதிக அளவில் உயிர்சேதம் மற்றும் பெரும்காயம், சிறுகாயம் போன்றவைகள் ஏற்பட்டு பட்டாசு தொழிலாளர்கள் பெரும் சிரமப்படுகிறார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது. எனவே, சட்டவிரோதமாக வீடுகளிலும், அனுமதி பெறாத இடங்களிலும் வெடிகள்/ பட்டாசுகள் மற்றும் கருந்திரி தயாரிப்பவர்கள் மீது உரிய நடவடிக்கையினை காவல்துறையின் மூலமாக எடுக்கப்படும் என்றும், மேலும் சட்ட விரோதமாக பட்டாசு உற்பத்தியில் ஈடுபடுவோர் மற்றும் மேற்படி குற்றச்செயலுக்கு உடந்தையாக இருந்த சம்மந்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர்கள் ஆகியோர்கள் மீது காவல்துறையின் மூலம் குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மேலும், உரிமதாரர்கள் தங்களது பட்டாசு தொழிற்சாலைகளை விதிமுறைகளுக்கு முரணாக வேறு நபர்களுக்கு உள்குத்தகைக்கு விடக் கூடாது எனவும், அவ்வாறு உள்குத்தகை விடப்படுகிறது என ஆய்வின்போது கண்டறியப்பட்டால் மேற்படி பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர்களின் மீதும், உள்குத்தகை நடவடிக்கையில் ஈடுபட்டோர்களின் மீதும் கடுமையான குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, மேற்படி ஆலைகளின் உரிமங்கள் நிரந்தரமாக இரத்து செய்யப்படும் என்றும், அதற்கான உரிய சட்டரீதியான நடவடிக்கைகள்; மேற்கொள்ளப்படும். அனுமதி பெறாமல் கள்ளத்தனமாக பட்டாசுத் தொழிலில் ஈடுபடுபவர்களை கிராம அளவில் கண்டறியும் பொருட்டு கிராம அளவிலான கள அலுவலர்களான கிராம நிர்வாக அலுவலர்கள், ஊராட்சி செயலாளர்கள் மற்றும் காவல்துறையினர் ஆகியோர்களைக் கொண்டு தொடர்ச்சியாக கிராமங்களைக் கண்காணிக்க வேண்டும் என்றும், அவ்வாறு கிராமங்களில் ஏதேனும் கள்ளத்தனமாக பட்டாசுத் தொழில் செய்து வருவதாக தகவல் கிடைத்தால் அது குறித்த தகவல்களை காவல்துறையினருக்கு அளிக்க வேண்டும் என்றும், இப்பணிகளை மிகவும் விழிப்புடன் தொடர்ச்சியாக செயல்படுத்த உரிய நடவடிக்கையினை வருவாய்த்துறையினர், காவல்துறையினர், ஊரக வளர்ச்சித்துறையினர் மற்றும் பிற துறையினரும் மேற்கொள்ள வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியரால் தெரிவிக்கப்பட்டது.

மேலும், ஏற்கனவே விருதுநகர் மாவட்டத்தில் போதை பொருட்கள் தொடர்பான குற்றச்செயல்களில் ஈடுபடுவோர்களை பற்றி தகவல்களை தெரிவிக்க கோரி விருதுநகர் மாவட்ட காவல் துறையின் இரகசிய கைபேசி (வாட்ஸ் ஆப்) எண்.9443967578-லும்; சட்டவிரோதமான பட்டாசு உற்பத்தி செய்வோர்கள் தொடர்பான தகவலினை தெரிவிக்கலாம் என்றும், தகவல் தெரிவித்தவர்களின் விவரங்கள் இரகசியமாக வைக்கப்படும் என்றும், பட்டாசு தொழிலாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆகியோர்கள் பாதுகாப்பு குறைபாடுகள் உள்ள பட்டாசு தொழிற்சாலைகள் குறித்த தகவல்களை மேற்படி வாட்ஸ் ஆப் எண்ணில் தெரிவிக்கவும், பாதுகாப்பு இல்லாத பட்டாசு தொழிற்சாலைகளில் பணிபுரிவதை தொழிலாளர்கள் தவிர்க்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story