விதிமீறல் பட்டாசு ஆலைகள் மீது கடும் நடவடிக்கை - ஆட்சியர் எச்சரிக்கை

விதிமீறல் பட்டாசு ஆலைகள் மீது கடும் நடவடிக்கை - ஆட்சியர் எச்சரிக்கை

ஆட்சியர் ஜெயசீலன்

வெடிபொருள் சட்ட விதிமுறைகளை மீறி செயல்படும் பட்டாசு தொழிற்சாலைகளின் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு உற்பத்தி தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துக்களை தவிர்த்திடும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், வெடிபொருள் சட்டம் மற்றும் விதிமுறைகளை பின்பற்றாமல் விதிமுறைகளை மீறி செயல்படும் பட்டாசு தொழிற்சாலைகளை கண்டறிந்து அவற்றின் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு நான்கு சிறப்பு ஆய்வுக் குழுக்கள் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த மூன்று மாதத்தில் மட்டும், மேற்படி சிறப்பு ஆய்வுக்குழுக்கள் மற்றும் வருவாய் துறையினரால் மட்டும் 439 பட்டாசு தொழிற்சாலைகள் ஆய்வு செய்யப்பட்டு, அவற்றில் 86 பட்டாசு தொழிற்சாலைகளின் உரிமங்கள் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளன. மேலும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கத்தினரால் 258 பட்டாசு தொழிற்சாலைகள் ஆய்வு செய்யப்பட்டு, அவற்றில் 56 பட்டாசு தொழிற்சாலைகளின் உரிமங்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மத்திய வெடிபொருள் கட்டுபாட்டுத்துறையினரால் 12 பட்டாசு தொழிற்சாலைகளின் உரிமங்கள் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளன.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பட்டாசு தொழிற்சாலைகளும் தங்களது பட்டாசு தொழிற்சாலையின் முன்பாக பெயர் பலகை வைத்திட வேண்டும் எனவும், மேற்படி பெயர் பலகையில் பட்டாசு தொழிற்சாலையின் பெயர், உரிமதாரர் பெயர், உரிம எண், உரிம வகை, உரிமம் வழங்கிய அலுவலர் மற்றும் செல்லுபடியாகும் காலம், தொழிற்சாலையில் உரிமத்தின்படி அனுமதிக்கப்பட்ட பணியாளர்களின் எண்ணிக்கை ஆகிய விபரங்கள் இடம் பெற்றிருக்க வேண்டும் என கடந்த மே மாதம் நடைபெற்ற மாவட்ட அளவிலான தொழிலக பாதுகாப்புக்குழு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் பல பட்டாசு தொழிற்சாலைகளில் இந்த விபரங்கள் அடங்கிய பெயர் பலகை இடம்பெறவில்லை என புகார்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு வந்தவண்ணம் உள்ளன. எனவே, மேற்படி விபரங்கள் அடங்கிய பெயர் பலகையினை ஒரு வார காலத்திற்குள் பட்டாசு தொழிற்சாலையின் முன்புறத்தில் அனைவரும் அறிந்திடும் வகையில்; பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர்கள் வைத்திட வேண்டும் என்றும், இதனை சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் மூலமாக கண்காணிப்பு செய்யப்படும் என்றும், மேற்படி பெயர் பலகையினை ஒரு வார காலத்திற்குள் வைக்காத பட்டாசு தொழிற்சாலையின் உரிமத்தின் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், அதேபோல் சிறப்பு ஆய்வுக்குழுக்கள் மற்றும் வருவாய்த்துறை, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம், வெடிபொருள் கட்டுபாட்டுத்துறை மற்றும் காவல்துறையினர் ஆகிய துறைகளால் பட்டாசு தொழிற்சாலைகள் தொடர்ச்சியாக ஆய்வு செய்யப்பட்டு, வெடிபொருள் சட்ட விதிமுறைகளை மீறி செயல்படும் பட்டாசு தொழிற்சாலைகளின் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன். தெரிவித்துள்ளார்.

Tags

Next Story