போதை பொருட்கள் விற்றால் கடும் நடவடிக்கை
ஆய்வு கூட்டம்
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் உரிய அனுமதியின்றி போதைப் பொருட்கள் விற்கப்படுகின்றதா என்பதை கண்காணித்தல், உரிய நடவடிக்கை எடுத்தல் தொடர்பாக வருவாய்த்துறையை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் காவல் துறையினருடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம், தலைமையில் ஜூன் இருபதாம் தேதி மாலை 5 மணி அளவில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவிக்கையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உரிய அனுமதியின்றி போதைப்பொருட்கள் விற்கப்படுகின்றதா என்பதை கிராம நிர்வாக அலுவலர்கள் அந்தந்த கிராம அளவில் கண்காணிக்க வேண்டும். எந்த வகையான போதைப்பொருட்களாக இருந்தாலும் அதை விற்பவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
நகரப்பகுதிகளில் தொடர் ஆய்வுகள் நடத்தப்படுவதோடு மட்டும் அல்லாமல் அனைத்து கிராமப்பகுதிகளிலும் இதுபோன்ற சட்டவிரோத செயல்கள் நடைபெறுகின்றதா என அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். அவ்வாறு ஏதேனும் தகவல் கிடைத்தால் சம்மந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். வருவாய்த் துறையினரும், காவல்துறையினரும் இணைந்து தொடர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். போதைப்பொருட்கள் இல்லாத மாவட்டமாக பெரம்பலூர் மாவட்டம் உள்ளது என்ற நிலையினை உங்களின் பணி உருவாக்க வேண்டும். போதைப்பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து ஒவ்வொரு குக்கிராம அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
பள்ளி கல்லூரி மாணவர்களுக்கும் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு, சார் ஆட்சியர் கோகுல் மதுவிலக்குப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலமுருகன், துணை காவல் கண்காணிப்பாளர் வளவன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்வைத்தியநாதன், உள்ளிட்ட அனைத்து வட்டாட்சியர்கள் மற்றும் அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்