கழிவுநீரை குளத்தில் விட்டால் கடும் நடவடிக்கை. - மேயர் எச்சரிக்கை
நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ்
நாகர்கோவில் அருகே வடக்கு கோணத்தில் அனந்தன் குளம் உள்ளது. இந்த குளத்தில் ஏற்கனவே படகு சவாரி நடந்து வந்தது. போதுமான சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் வராததால் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்த குளத்தில் தற்போது ஏராளமான குப்பைகள் கொட்டப்படுவதாகவும் குடிமகன்கள் தொந்தரவு செய்வதாகவும் மேயர் மகேஷுக்கு புகார் வந்தது. இதையடுத்து மேயர் மகேஷ் குளத்தை நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்து, பொதுப்பணித்துறை மாநகராட்சி மற்றும் பொதுமக்கள், தன்னார்வலர்கள் உதவியுடன் குப்பைகளை அகற்றும் பணி தொடங்கியது. ஜே.சி.பி. எந்திரம் மூலம் குளத்தின் கரையில் கிடந்த முட்புதர்கள் மற்றும் குப்பைகள் அகற்றப்பட்டது. இந்த பணியை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:- அனந்தன் குளத்தில் உள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வீடுகளில் இருந்து கழிவுகளை குளத்தில் விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆய்வின்போது நகர்நல அதிகாரி ராம்குமார், பாதிரியார் சூசை ஆண்டனி, துணை மேயர் மேரி பிரின்சிலதா, கவுன்சிலர் சிஜி பிரவீன் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.