காதல் கணவருடன் சேர்த்து வைக்க கோரி போராட்டம் !
சேலத்தில் காதல் கணவருடன் சேர்த்து வைக்க கோரி வீட்டு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட இளம்பெண்.
சேலத்தில் காதல் கணவருடன் சேர்த்து வைக்க கோரி அவரது வீட்டு முன்பு இளம்பெண் தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் சூரமங்கலத்தை அடுத்துள்ள அரியாகவுண்டம்பட்டி மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் மனோஜ் பிரதாப் (வயது 25). இவர் சேலத்தில் உள்ள தனியார் கார் கம்பெனியில் ஊழியராக வேலை செய்து வருகிறார். அதே கார் நிறுவனத்தில் தாரமங்கலம் பகுதியைச் சேர்ந்த பொன்னரசி (24) என்பவரும் வேலை செய்து வந்தார். இவர்கள் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதையடுத்து நண்பர்கள் உதவியுடன் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23-ந் தேதி நாமக்கல் மாவட்டம் மலைக்கோட்டை முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் வெவ்வேறு வகுப்பை சேர்ந்தவர்கள் என்பதால் எதிர்ப்பு ஏற்பட்டது. இதையடுத்து பொன்னரசி மற்றும் மனோஜ் பிரதாப் ஆகிய இருவரும் தர்மபுரியில் உள்ள அதே கார் டீலரின் விற்பனை பிரிவில் வேலை செய்து வந்தனர். மனோஜ் பிரதாப் கடந்த மாதம் 1-ந் தேதி பொன்னரசியை விட்டு திடீரென பிரிந்து பெற்றோர் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த பொன்னரசி கடந்த மாதம் 7-ந் தேதி விஷத்தை குடித்து விட்டார். பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். சம்பவம் தொடர்பாக பொன்னரசி தாரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு ஓமலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. இதற்கிடையில் காதலன் மனோஜ் பிரதாப்பை வீட்டில் அடைத்து வைத்திருப்பதாக கூறி, அரியாகவுண்டம்பட்டி மாரியம்மன் கோவில் அருகே உள்ள காதல் கணவரின் வீட்டுக்கு நேற்று முன்தினம் இரவு பொன்னரசி வந்தார். அங்கு வீட்டின் முன்பு திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தகவல் அறிந்து சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகலா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
Next Story