மதிப்பெண் குறைந்ததால் மாணவி தற்கொலை
தற்கொலை
ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் முண்டா. இவருடைய மகள் லாவணிதேவ் (17). வேலூர் சேண்பாக்கம் செல்வ விநாயகர் கோவில் அருகே உள்ள தனியார் ஆசிரமத்தில் தங்கி கொணவட்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து கடந்த கல்வியாண்டில் பொதுத்தேர்வு எழுதினார்.
அதன்முடிவுகள் கடந்த 10-ந் தேதி வெளியானது. தேர்வில் லாவணிதேவ் 500-க்கு 295 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். தேர்வில் தேர்ச்சி பெற்ற போதிலும் மதிப்பெண்கள் குறைந்து விட்டதாக அவர் மனவேதனையில் இருந்ததாகவும், மேலும் ஆசிரம தோழிகளிடம் மதிப்பெண் குறைந்ததை பற்றி அடிக்கடி கூறி வருத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் லாவணிதேவ் நேற்று முன்தினம் இரவு திடீரென ஆசிரமத்தில் இருந்து காணாமல் போனார். இதையடுத்து ஆசிரம பொறுப்பாளர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் லாலணிதேவ் சேண்பாக்கம் செல்வ விநாயகர் கோவில் குளத்தில் நேற்று காலை பிணமாக மிதந்து கொண்டிருந்தார்.
இதைக்கண்ட கோவில் பாதுகாவலர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
பின்னர் வேலூர் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று குளத்தில் இறங்கி சிறுமியின் உடலை கயிறு கட்டி மீட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.