தேர்வில் தோல்வி- மாணவர் தற்கொலை
தற்கொலை
நீலகிரி மாவட்ட,ம் குன்னூர், ஜெகதலா பகுதியை சேர்ந்த ஜெயராமன், உஷாராணி தம்பதிக்கு 3 மகன்கள் உள்ளனர். இதில் 3வது மகன் சஞ்சய்காந்த் 16, குன்னூர் வெலிங்டன் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மத்திய அரசின் பாடத்திட்டம் கடைபிடிக்கப்படுவதால், மாநில அரசு பாடத்திட்டத்திற்கு முன்னதாகவே தேர்வு முடிவுகள் வந்துவிடும்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளிவந்தது. இதில் சஞ்சய்காந்த் தோல்வி அடைந்துள்ளார். இதனால் மன வருத்தம் அடைந்த சஞ்சய்காந்த், அது குறித்து தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் கூறி வருத்தம் அடைந்து வந்தார். கவலைப்பட தேவையில்லை அடுத்த தேர்வில் பார்த்துக் கொள்ளலாம் என்று அவருக்கு ஆறுதல் சொல்லி வந்தனர்.
ஒரு கட்டத்தில் மன அழுத்தம் அதிகமானதால், சஞ்சய்காந்த் தனது தாயாரின் சேலையில் வீட்டின் அருகே உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிநிலையில் இருந்தார். இதை கண்ட அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து அவரை மீட்டு குன்னூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், சஞ்சய்காந்த் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து அவருடைய உடல் உடற்கூறாய்வுக்கு அனுப்பப்பட்டது. இது குறித்து அருவங்காடு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்கின்றனர். தேர்வில் தோல்வியடைந்ததால் பிளஸ்-1 மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு சம்பவம் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.