திருவையாறு இசைக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் 

திருவையாறு இசைக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் 

இசை கல்லூரி 

திருவையாறு இசைக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு, தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரியில் இளங்கலை, முதுகலை மற்றும் பட்டயப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. திருவையாறு, தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரியில் 243 மாணவ, மாணவியர்கள் பயின்று வருகின்றனர். இளங்கலை இசை பிரிவில் குரலிசை, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதசுரம், தவில் ஆகியவை முதன்மைப் பாடங்களாகவும், பட்டயப் படிப்பில் குரலிசை, வீணை, வயலின், மிருதங்கம், பரதநாட்டியம், தவில், நாதசுரம், நட்டுவாங்கம் மற்றும் நாட்டுப்புறக்கலை ஆகியவை முதன்மைப் பாடங்களாகவும் மற்றும் இசை ஆசிரியர் பயிற்சி பட்டயமும் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன.

முனைவர் பட்ட ஆய்வு மையமாகவும் செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் உள்ள பாடப்பிரிவுகளில் புதிதாக சேர்வதற்கான கல்வித் தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட தகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. குரலிசை, வயலின், வீணை, மிருதங்கம், நாதசுரம், தவில், பரதநாட்டியம், நாட்டுப்புறக்கலை 3 ஆண்டுகள் பட்டயப்படிப்பு பயில 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 16 முதல் 30 வரை இருத்தல் வேண்டும். நட்டுவாங்கம் 1 ஆண்டு; பட்டயப் படிப்பு பயில 10ஆம் வகுப்பு தேர்ச்சியுடன், மூன்றாண்டு பரதநாட்டியம் பட்டயம் தேர்ச்சி அல்லது இளங்கலை பரதநாட்டியம் முதன்மைப் பாடத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு 16 முதல் 35 வரை இருத்தல் வேண்டும். இளங்கலை இசை குரலிசை, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதசுரம், தவில் 3 ஆண்டுகள் பட்டப் படிப்பு பயில 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 17 முதல் இருத்தல் வேண்டும். முதுகலை இசை குரலிசை, வீணை 2 ஆண்டுகள் பட்டப் படிப்பு பயில இளங்கலை இசை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு இல்லை. இசை ஆசிரியர் பயிற்சி 1 ஆண்டு பட்டயப் படிப்பு பயில 10ஆம் வகுப்பு தேர்ச்சியுடன், இளங்கலை இசைப் பட்டம் (அல்லது) மூன்றாண்டு இசை பட்டயம் (அல்லது) இசையில் இதற்கு நிகரான பட்டயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 16 முதல் 35 வரை இருத்தல் வேண்டும்.

இசையில் முனைவர் பட்ட ஆய்வு படிப்பு பயில கல்வித் தகுதி மற்றும் ஏனைய விவரங்கள் அறிய தொடர்புடைய கல்லூரியை அணுகவும். மேற்காணும் தகுதியுடன் இக்கல்லூரியில் சேர விருப்பம் தெரிவிக்கும் மாணவர்கள் திருவையாறு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் அமைந்துள்ள இசைக் கல்லூரிக்கு நேரிலோ அல்லது இணைய வழியிலோ www.artandculture.tn.gov.in அதற்கான விண்ணப்பத்தினை பெற்றுக்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

மேலும், 04362 - 261600 என்ற தரைவழி தொலைபேசி எண்ணிலோ, மெயில் - tngmctvyr@gmail.com தொடர்பு கொள்ளலாம் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story