பள்ளி வேலையில் மாணவர்கள்: வைரலாகும் வீடியோவால் பரபரப்பு
கம்பி வேலிகளை தூக்கும் மாணவர்கள்
பெரம்பலூர் அருகே உள்ள ஆய்க்குடி கிராமத்தில் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையில் பயின்று வருகின்றனர்.
இந்த பள்ளியில் உள்ள பழமையான ஓட்டு கட்டிடத்தில் மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வந்து கிராமத்தில் சுற்றி திரியும் குரங்குகள் கூட்டம் பள்ளி கட்டத்தின் ஓடுகளை பிரித்து உள்ள சென்று பள்ளியில் உள்ள ஆவணங்கள் உள்ளிட்ட பொருட்களை சேதப்படுத்துவதோடு மாணவர்களை அச்சுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் குரங்குகள் பாதிப்பில் இருந்து தடுப்பதற்காக கட்டடத்தின் மேல் உள்ள ஓடுகளின் மீது கம்பி வேலி அமைக்கும் பணிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதற்காக வெளியூரிலிருந்து கம்பிகள் வாங்கி வந்து பள்ளி வளாகத்தில் இறக்கிய பள்ளி நிர்வாகம் அதனை பாதுகாப்பாக பள்ளியில் கட்டடத்தில் உள்ளே வைப்பதற்காக மாணவர்களை சுமந்து செல்ல அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து கம்பி ரோல்களை மாணவர்கள் சுமந்து சென்று பள்ளியின் கட்டடத்திற்குள் வைக்கின்றனர். இந்த காட்சியினை அந்த வழியாக சென்ற சிலர், செல்போனில் வீடியோ எடுத்து, மாணவர்களை வேலை வாங்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி அதனை சமூக வலைதளங்களில் வைரலாக பரப்பியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து துறை சார்ந்த அதிகாரிகள் பள்ளியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.